செவ்வாய், 28 ஜூன், 2022

TNEA Counselling: அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரலாமா? தேர்ச்சி விகிதம் எப்படி?

 27 06 2022

TNEA 2022 Anna University campus and Govt Engineering colleges pass percentage details: பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரலாமா, அவற்றின் தேர்ச்சி விகிதம் எப்படி? என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில், சிலர் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கிறார்கள், அதாவது அந்தக் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள்.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி போன்ற ஒரு சில அரசு கல்லூரிகளை தவிர பிற அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்களிடம் தயக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இவற்றில் சில கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தன.

இருப்பினும் வசதி குறைவான மாணவர்களின் விருப்பமாக அரசுக் கல்லூரிகள் தான் உள்ளன. எனவே அரசு கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாமா? அவற்றின் தேர்ச்சி விகிதம் எப்படி? என்பதையெல்லாம் இப்போது பார்ப்போம்.

கேரியர் கைடன்ஸ் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளை அவற்றின், தேர்ச்சி விகித அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ளார். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து தான் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்த விவரங்கள் கீழ்காணுமாறு:

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி 80.12% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக எம்.ஐ.டி கல்லூரி 79.24%, ஏ.சி.டெக் கல்லூரி 73.23% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 61.65% தேர்ச்சி விகிதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. அடுத்ததாக, அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகக் கல்லூரி 55.85% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. கோவை பகுதியில் விரைவில் நிரப்பப்படும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

அடுத்தப்படியாக, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி காஞ்சிபுரம், 54.48% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த 6 கல்லூரிகள் தான் 50%க்கு மேலான தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

இவற்றிற்கு அடுத்தப்படியாக திருச்சி பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி 41.86% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. நாகர்கோவில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அடுத்த இடத்தில் 41.59% தேர்ச்சியுடன் உள்ளது.

அடுத்து பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி விழுப்புரம், 39.72% தேர்ச்சி விகிதத்துடனும், தூத்துக்குடி வி.ஓ.சி பொறியியல் கல்லூரி, 37.20% தேர்ச்சி விகிதத்துடனும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி திருநெல்வேலி வளாகம் 36% தேர்ச்சி விகிதத்துடனும் உள்ளன.

அடுத்ததாக பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான, திண்டிவனம் 34.20%, ஆரணி 33.21%, பண்ருட்டி 32.98%, மதுரை வளாகம் 32.35%, திண்டுக்கல் 25.21%, அரியலூர் 23.18%, திருக்குவளை 18.90%, ராமநாதபுரம் 16.77%, பட்டுக்கோட்டை 12.45% என்ற அளவில் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அரசு பொறியியல் கல்லூரிகள்

சேலம் அரசு பொறியியல் கல்லூரி – 76.85%, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 76.61%, காரைக்குடி அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – 70.24% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அடுத்தப்படியாக, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி – 59.84%, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி – 47.78% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அடுத்த இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பர்கூர் – 43.33%, வேலூர் தந்தை பெரியார் கல்லூரி – 43.17%, திருச்சி – 42.26%, தருமபுரி 30.24%, தஞ்சாவூர் – 27.52%, தேனி 24.63% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

இவற்றை மனதில் வைத்து, கல்லூரிகளை நேரடியாக ஆய்வு செய்து, வேலைவாய்ப்புகளைத் தெரிந்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2022-anna-university-campus-and-govt-engineering-colleges-pass-percentage-details-471375/