தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மகளிர் மாணவர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மாநில செய்தி தொடர்பு இணை செயலாளார் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், “எங்கள் கல்விக் கொள்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு மாணவனின் தனி திறமையும் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் நான் முதல்வன் திட்டம். அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாமெல்லாம் தமிழினம் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட்டு இன்று வரை நம் மொழியை காப்பதில் திராவிட தலைவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
ஆகவே மொழி உணர்வு நமக்கு வேண்டும் அதையே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூகநீதியை கொண்டு வந்தது திமுகதான். கொண்ட கொள்கையில் பிடிப்புடனும் சமுதாய உணர்வோடும் இருப்போம்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/the-future-of-the-youth-is-in-question-due-to-the-agnibad-project-minister-geetha-jeevan.html