திங்கள், 13 ஜூன், 2022

அரசுப் பள்ளிகளில் மீண்டும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 9 6 2022 

Minister Anbil Mahesh announced LKG UKG classes continues in Govt Schools: அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மழலையர் வகுப்புகள் எனப்படும் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சில இடங்களில் ஆர்பாட்டங்களும் நடைபெற்றது.

இதனையடுத்து, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை, அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுகிறது, அங்கன்வாடி மையங்களில் அந்த வகுப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கன்வாடி மையங்களில் உள்ள அமைப்பாளர்களால் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த முடியுமா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேநேரம், எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் குறித்த முடிவை அமைச்சர், இன்று அறிவித்துள்ளதால், அரசுப் பள்ளிகளில் அந்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. மேலும் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான தேர்வு முறை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய விவரங்கள் அடங்கிய அறிவிப்பை விரைவில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/minister-anbil-mahesh-announced-lkg-ukg-classes-continues-in-govt-schools-464880/