வியாழன், 2 மார்ச், 2023

11, 12-ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

 1 3 23

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மார்ச் 3 ஆம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதே போல், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி, கடவுச்சொல் கொண்டு, தங்கள் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி முதல் இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில், மேற்கண்ட இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தாங்கள் பயிலும் வகுப்பு விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயனர் எண் (USER ID) மற்றும் கடவுச் சொல் (PASSWORD) கொண்டு உள்நுழைந்து, தங்களின் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக் கொள்ளவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-hsc-exam-2023-hall-ticket-how-to-download-602016/