திங்கள், 20 மார்ச், 2023

ஐரோப்பாவில் உயர்கல்வி | சுவீடன் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

 ஐரோப்பாவில் உயர்கல்வி | சுவீடன் நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

சுவீடன் நாட்டினைப் பொறுத்தவரை 4 பிரிவிகளின் கீழ் 48 கல்வி நிறுவனங்கள் உள்ளன. 1) பல்கலைக்கழகங்கள், 2) பல்கலைக்கழகக் கல்லூரிகள் (தொழில்நுட்பக் கல்லூரிகள்), 3) பல்கலைக்கழகக் கல்லூரிகள் (கலை, பயனுறுக் கல்வி) 4) இதர தனியார் கல்வி நிறுவனங்கள்.
பெரும்பாலுமான பல்கலைக்கழகங்களில் இளநிலை அறிவியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்பு 3 ஆண்டுகள், முதுநிலை 2 ஆண்டுகள். இளநிலை அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளுக்குத் தோராயமாக 3 ஆண்டுகளுக்கு 30 லட்சமும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்குத் தோராயமாக 16 லட்சமும் கல்விக்கட்டணத்திற்கு மட்டும் செலவாகிறது. வருடாந்திர வாழ்க்கைச் செலவிற்குத் தனியாக கணக்கில் கொள்ள வேண்டும். (இக்கட்டுரையின் இறுதியில் அவை விளக்கப்பட்டுள்ளன.) சுவீடன் நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் பல்கலைக்கழக ஆட்சிமன்ற விதிகளை வகுக்கின்றன, சுவீடிஷ் உயர்கல்வி ஆணைக்குழு (Swedish higher education authority) பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தர மேம்பாடுகளை கவனிக்கின்றன. பெரும்பாலுமான சுவீடிஷ் பல்கலைக்கழகங்கள், உலகத் தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகித்து வருகின்றன.
ஐரோப்பாவில் உயர்கல்விஐரோப்பாவில் உயர்கல்வி
பெரும்பாலுமான முதுநிலை அறிவியல்/பொறியியல்/தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன, சமீப காலமாக பன்னாட்டு மாணவ, மாணவிகளை ஈர்க்கும் விதமாக இளநிலை அறிவியல்/பொறியியல்/தொழில்நுட்ப பட்டப்படிப்புகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை அதிகரித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட இளநிலை பட்டப்படிப்புகளையும் 900-க்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் சுவீடிஷ் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. சுவீடன் நாட்டினைப் பொறுத்தவரை, ஆண்டிற்கு இருமுறை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, இரு பருவமுறைகளில் (Spring and Autumn Semester) – அதாவது, ஜனவரி மற்றும் செப்டம்பரில் பல்கலைக்கழக நுழைவு முறை உள்ளது. ஜனவரி 2023-க்கான பட்டப்படிப்புத் தொடக்கத்திற்குத் இந்த மாதம் (ஆகஸ்டு) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. இளநிலைக் கல்வியில் சேர, +2 வகுப்பில் கணிதப் பாடத்தின் மதிப்பெண் மிக அவசியம்.
2. +2 தேர்வில், ஆங்கிலம் மொழித் தேர்வு மதிப்பெண்ணும் குறைந்தது 3 பாடங்கள் ஆங்கிலத்தில் படித்து பெற்ற மதிப்பெண்களும் ஆங்கிலப் புலமை சான்றிதழுக்குப் பதிலாக காட்டலாம், அல்லது சிபி.எஸ்.சி பாடத்திட்டத்தில் +2 நிறைவு செய்திருக்க வேண்டும், இல்லையேல், Council for the Indian School Certificate Examinations (CISCE)-ன் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுக்கப்படும். முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர, இளநிலைக் கல்வியை ஆங்கிலத்தில் நிறைவு செய்திருக்க வேண்டும்.
3. இவையேதும் இல்லையெனில் IELTS (International English Language Testing System), TOEFL (Testing of English as a Foreign Language), Pearson PTE Academic, University of Cambridge ESOL Examinations (Cambridge ESOL) போன்ற மதிப்பீடுகள் கணக்கில் கொள்ளப்படும்.
4. முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர, குறைந்தது 4 ஆண்டுகள் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். அல்லது, 3 ஆண்டுகள் இளநிலையும் 1 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள் இளநிலை ஆயுர்வேதா, சித்தா, யுனானி பட்டப்படிப்புகள் சுவீடனில் உயர்கல்வி பயில வாய்ப்பில்லை.
5. இவற்றோடு ஒவ்வொரு பாடப்பிரிவிற்குமென சில விதிமுறைகள் மற்றும் தகுதிநிலை உண்டு. அதனையும் கவனத்தில் கொண்டு விண்ணப்பிப்பது மிக அவசியம்.
சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகங்களில், கல்விக்கட்டணமாக அரையாண்டிற்கு ஒருமுறை கட்ட வேண்டியத் தொகை 5,50,000 ரூபாய் வரை ஆகும். அதேபோல, நுழைவுரிமை (visa) விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுதே, இரண்டாண்டிற்கான ஒட்டுமொத்த சராசரி வாழ்க்கைச் செலவான மாதம் 8370 சுவீடிஷ் குரோணர் (Swedish krona) அளவில் மாணவ, மாணவியரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும். இரண்டாண்டு கல்வியெனில் தோராயமாக இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாய் மற்றும் நான்கு ஆண்டுக் கல்வியெனில் தோராயமாக 30 லட்ச ரூபாய் வங்கிக்கணக்கில் வைப்பு வைத்திருக்க வேண்டும்.
1. சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்:
சுவீடன் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:
2. சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்:
சுவீடன் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:
3. பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்
அடுத்ததாக, இளநிலை மற்றும் முதுநிலை கல்விக்கான அனுமதி விதிமுறைகள் குறித்து அறிய,
விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்து அறிய,
3 - அ) இளநிலைக் கல்வி:
3 - ஆ) முதுநிலைக் கல்வி:
4. ஆங்கிலப்புலமைத் தேர்வு
ஆங்கிலப் புலமை சோதனையில் (English Proficiency test) குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
5. விண்ணப்பிக்கும் முறை:
இவையனைத்தையும் அறிந்த பின் விண்ணப்பங்கள் குறித்தும் அதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் அறிந்துக்கொள்ளல் வேண்டும்.
https://www.universityadmissions.se/ என்ற இணையத்தில் விண்ணப்பங்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஆவணங்கள் குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கியுள்ளன. ஒரே விண்ணப்பத்தில் நான்கு பல்கலைக்கழகத்திற்கும் நான்கு பாடப்பிரிவிற்கும் விண்ணப்பிக்கலாம்.
சுவீடனைப் பொறுத்தவரை அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அனைத்துப் பாடப்பிரிவிற்கும் ஒரே விண்ணப்பம் போதும். ஒரு மாணவர் அல்லது மாணவியருக்கு ஒரு விண்ணப்பம். விண்ணப்பத்திற்கான கட்டணம் 900 சுவீடீஷ் குரோணர், அதாவது கிட்டத்தட்ட 7000 ரூபாய்.
கல்விக்கட்டணம்: ஒவ்வொரு அரையாண்டிற்கும் 50000 குரோணர் முதல் 72500 குரோனர் வரை… அதாவது 4,00,000 ரூபாய் முதல் 5,50,000 ரூபாய் வரை ஆகும். சுவீடன் குரோணருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மாறுதலுக்கு ஏற்ற வகையில், கல்விக்கட்டணமும் இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றம் காணும் என்பதனையும் நினைவில் கொள்க.
6. விண்ணப்பிக்கும் நாள்கள்:
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ஆகஸ்டு 15-ம் நாள் மற்றும் ஜனவரி 15ஆம் நாள் விண்ணப்பிக்கக் கடைசி நாட்கள்.
7. வாழ்க்கைச் செலவு:
தனி மனித வாழ்க்கைச் செலவு ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்நிலை பொறுத்து மாறும் எனினும் கல்விக் கற்க வந்து சுவீடனில் வசிக்கும் மாணாக்கர்களிடம் அறிந்துக்கொண்டதன் படி, தங்கும் வீட்டு மாத வாடகை 2500 – 4500 சுவீடிஷ் குரோணர் (அதாவது 19000 – 34000 இந்திய ரூபாய்) எனவும் உணவு மற்றும் இதரச் செலவு மாதந்தோறும் 750 குரோணர் முதல் 2000 குரோணருக்குள் (அதாவது 6000 – 17000 இந்திய ரூபாய்) அடக்கலாம் எனக் கூறினர்.
ஆனால், நுழைவிசைவு (student visa) விண்ணப்பிக்கும்பொழுது, மாதம் 8694 சுவீடிஷ் குரோணர் – Swedish Kroner, எத்தனை மாதத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அத்தனை மாதத்திற்கான தொகையினைக் கணக்கிட்டு, நம் வங்கிக் கணக்கில் கையிறுப்பு வைத்திருக்க வேண்டும். 8694 குரோணர் தோராயமாக 66500 ரூபாய் வருகிறது.
மேலே கூறிய நமது செலவிற்கான கணக்கும் சுவீடனின் குடிவரவுச் சட்டத்தின் தேவையும் மாறுபடுகிறது கவனிக்கவும்.
நுழைவிசைவு (Visa) கிடைத்து சுவீடன் வந்தடைந்ததும், எக்காரணம் கொண்டும், வங்கியில் மீதமூள்ள தொகையினையோ, அல்லது தேவைக்கு அதிகமாக இருக்கிறதென்றோ, மீண்டும் நம் பெற்றோருக்கு அப்பணத்தை அனுப்பிவிடக்கூடாது. அடுத்தாண்டு, நுழைவிசைவு (visa) விண்ணப்பிக்கும்பொழுது, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, கல்வியைத் தொடரமுடியாதச் சூழல் உருவாகி, சொந்த நாட்டிற்கு நீங்கள் திருப்ப அனுப்பப்படலாம். எச்சரிக்கை அவசியம்.
8. சுவீடன் மாணவ நுழைவிசைவு (Student Visa)
சுவீடன் நுழைவுரிமை மற்றும் வதிவிட உரிமை (residence permit) விண்ணப்பம் சமர்பிப்பது தொடர்பாக, கீழே உள்ள இணைய முகவரியில் படிக்கவும்.
9. சுவீடன் நாட்டு கல்வி ஊக்கத்தொகை
சுவீடன் நாட்டில் கல்விக் கற்கும் அனைத்து நாட்டிற்குமென பொதுவான பன்னாட்டு ஊக்கத்தொகைகள் ஏராளம். பெரும்பாலும் முதுநிலை அறிவியல்/பொறியியல் மாணவ, மாணவிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக, ஏனையப் பல்கலைக்கழகங்களும் அவரவர் மாணவ, மாணவிகளுக்கு 25% முதல் 100% வரையிலான கல்விக்கட்டணத்தை ஊக்கத்தொகையாக வழங்குகின்றனர். இதற்காகவே ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனியே அலுவலகம் வைத்து தங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுகின்றனர். இவை அனைத்தும் இன, மொழி வேறுபாடின்றி அனைத்து நாட்டினருக்கும் வழங்குகின்றனர்.
இவற்றில் பெரும்பாலுமான ஊக்கத்தொகைக்கு மாணவ, மாணவியரின் கல்வித்தர மதிப்பீடுகளும், தங்கள் நாடுகளில் கல்விப்பயின்ற பல்கலைக்கழகங்களின் தரவரிசையும் கணக்கில் எடுக்கப்படுகிறது.
இதில் குறிப்பாக, வால்வோ நிறுவனம் Volvo Group Scholarship, இந்தியா மற்றும் சீனா நாட்டு மாணவ, மாணவிகளில் இருவருக்கு 100% கல்விக்கட்டணத்தை வழங்குகின்றனர். அதோடு, தங்கள் நிறுவனங்களில் ஒன்றில் முதுநிலை கல்வியின் ஆராய்ச்சிக் கால பங்களிப்பு, நிதி ஆகியவற்றைத் தங்கள் நிறுவன வளாகத்திலேயே வழங்குகின்றன.
இவ்வரிசையில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தையும் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.
Royal KTH பல்கலைக்கழகத்தினரோடு, ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்கு (UN sustainability development goals) திட்ட இயக்ககமும் இணைந்து பன்னாட்டு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது. அதனால், இப்பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் பெரும்பாலுமான பாடத்திட்டத்தில் ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்குக் கோட்பாடுகளின் வடிவங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
அதேபோல, KTH India Scholarship foundation என்ற ஊக்கத்தொகைத் திட்டத்தின் படி, இந்திய மாணவ, மாணவிகளுக்கென வாய்ப்புகள் தனியேவும் உள்ளன. ஊக்கத்தொகை வழங்கும் அறக்கட்டளை நிறுவனத்தின் சட்டத்திட்டத்தின் படி, மும்பை, பூனே மாநகர மாணவ, மாணவிகளுக்கு தனியே முன்னுரிமை உள்ளதெனினும் அனைத்து இந்தியர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக, இப்பல்கலைக்கழகத்தின் இன்னபிற ஊக்கத்தொகைத் திட்டத்தின்படியும் விண்ணப்பிக்கலாம்.
10. சுவீடனின் பல்கலைக்கழகப் பட்டியல்
The Major colleges in Sweden for Engineering and Technology courses would be:
o KTH University , Stockholm
o Uppsala University , Uppsala
o Chalmers University, Gothenburg
o Linkoping University
o Blekinge University, Karlskrona
o Lund University
o Malarden University , Vasteras
For Biology related courses the following universities have high reputation:
o Uppsala University, Uppsala
o Karolinska University, Stockholm
- Credit : முனைவர் விஜய் அசோகன், சுவீடன் / #tntjsw