10 04 23
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆங்கில தாளில் குளறுபடிகள் உள்ளதால், உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் பொதுத்தேர்வுக்கு 4,207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்தநிலையில், இன்று (ஏப்ரல் 10) ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற ஆங்கில தேர்வில் வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். கேள்வி எண்கள் 4, 5, 6-ல் குளறுபடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1 முதல் 6 வரையிலான கேள்விகளில் தலா 3 அருஞ்சொற்பொருள் (Synonyms) அறிக, எதிர்ச்சொல் (Antonyms) அறிக என்பதற்கு பதிலாக 6 கேள்விகளும் அருஞ்சொற்பொருள் அறிக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில் எதிர்ச்சொல் பிரிவில் வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு உரிய தலைப்பு வழங்கப்படவில்லை. மேலும் வினா எண் 28-ல் சாலை வரைபடத்தில் வழி அடைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவறான வினாக்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-sslc-exam-english-paper-mistakes-teachers-request-to-give-grace-marks-634284/