தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தினமும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதனை தொடர்ந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறையில் 31 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
1.புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் 90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டரங்கங்களை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
2.2023ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பை தரும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
3. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் நேரு உள் விளையாட்டு அரங்கம் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்கள் 25 கோடி செலவில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
4. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எலைட் திட்டம் மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மிம்ஸ் ஆகிய திட்டங்களின் வழங்கப்படும் சிறப்பு உதவி தொகை 25 லட்சத்திலிருந்து 30 லட்சமாகவும் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 25ஆக உயர்த்தப்படும்.
5. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி செலவில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
6. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நவீன எல்இடி மின்விளக்கு வசதிகள் ஒன்பது கோடியே 90 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.
7. கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் ஏழு கோடி வீட்டில் அமைக்கப்படும்.
8. மாநிலத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 6 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கங்களில், பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
9. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் 3 கோடி மதிப்பில் நிறுவப்படும்.
10. மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து TN சாம்பியன்ஸ் அறக்கட்டளை அமைக்கப்படும்.
11. மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்துவதற்கு 2 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
12. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
13.2023 சென்னை சுவாஸ் உலக கோப்பை நடத்துவதற்கு ஒரு கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
14. திருச்சி ஓலையூரில் தேசிய மாணவர் படை நிரந்தர பயிற்சி மையம் அமைக்க முதற்கட்டமாக ஒரு கோடி நிதி ஒதுக்கப்படும்.
15. ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் மையத்தில் விளையாட்டு விடுதி மற்றும் புதிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
16.செங்கல்பட்டு மாவட்டம் நீர் பெயரில் அமைந்துள்ள தேசிய மாணவர் படை நிரந்தர முகாமில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூபாய் 100 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
17.தேசிய மாணவர் படையினர் பங்கேற்கும் குடியரசு தின அணி வகுப்பு மற்றும் இதர முகாம்களுக்கான நிதி உதவி ரூபாய் 100 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
18.நாட்டு நல பணித்திட்ட அமைப்பின் பல்வேறு சிறப்பு செயல்பாடுகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
19.புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நிபுணத்துவ பயிற்றுநர்களாக பயன்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
20.மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் உள்ள தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமி உட்கட்டமைப்பை மேம்படுத்த ஐம்பது லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
21.விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
22.விளையாட்டு அறிவியல் குறித்த பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
23.புதிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை தரம் உயர்த்துவதன் மூலம் மாநிலத்தில் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும்.
24.ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுக்கான அகாடமி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
25.ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் 2023 சென்னையில் நடத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
26.ஏடிபி சென்னை ஓபன் டூர் 2023 சென்னையில் நடத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
27.பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் எண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
28.நம்ம ஊரு விளையாட்டு திடல் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பள்ளி கல்வி துறையுடன் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
29.தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம் பத்மநாதபுரம், ஆலங்குடி, மற்றும் காரைக்குடி ஆகிய 10 சட்டமன்ற தொகுதியில் அமையவிருக்கும் சிறு விளையாட்டு அரங்குக்கு முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் என பெயரிடப்படும்.
30.மாநிலத்தின் ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கான வழிகாட்டியாக தமிழ்நாடு விளையாட்டு கொள்கை கொண்டுவரப்படும்.
31.சென்னையில் உலக தரத்தில் இந்தியாவின் முதல் ஆறு ட்ராப் ரேஞ்ச் அடங்கிய ட்ராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/sports-youth-welfare-department-grant-request-discussion-minister-udayanidhi-stalin-who-released-new-announcements.html