வெள்ளி, 29 டிசம்பர், 2023

கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!

 

அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் கேஸ் கசிவு ஏற்பட்டது.   இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம்,  தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல்,  கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.

இந்நிலையில்,  அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல்,  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து,  சுமார் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 500 மேற்பட்டோர் தொழிற்சாலை இரண்டு நுழைவாயிலில் முன்பு தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது தொழிற்சாலை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாக தெரிவித்தனர்.

இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியும்,  ஒரு வார காலம் தொழிற்சாலையில் தற்காலிகமாக

மூடுவதற்கு தொழிற்சாலையின் நுழைவாயிலில் அறிக்கையை ஒட்டிய நிலையில் ஒரு சிலர் கலைந்து சென்றனர்.

ஒரு தரப்பினர் மட்டும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர்ந்து 2-வது நாளாக தொழிற்சாலை நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதாகவும்,  தொழிலாளர்களின் நடமாட்டம்
தெரிவதாகவும் தெரிவித்தனர்.  எனவே இந்த தொழிற்சாலையை இந்தப் பகுதியில் இருந்து நிரந்தரமாக மூடி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் 2-வது நாளாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிலர் சிகிச்சை
முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தனர்.


source https://news7tamil.live/the-people-of-ennore-are-protesting-for-the-2nd-day-demanding-the-permanent-closure-of-the-coromandel-factory.html