‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூரபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மகளிர் சுய
உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாவது:
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள
1877 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், 24,000 பயனாளர்களுக்கு இன்று மற்றும்
ரூபாய் 125 கோடியே 50 லட்சம் கடனுதவி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட மாடல் அரசு மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக திட்டங்களை அறிவித்து
வருகிறது. ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்த சுயமரியாதை திருமணங்களை சட்டம் ஆக்கினார் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே முதன்முறையாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்னும் சட்டத்தை கொண்டு வந்தவர் டாக்டர் கலைஞர்.
இதுபோல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமை பெண் திட்டம், கலைஞர்
மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்களை 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதன்முறையாக தொடங்கி வைத்தார். தருமபுரியில் தொடங்கப்பட்ட ஒரு மகளிர் சுய உதவி குழுவானது, தற்போது 5 லட்சம் சுய உதவி குழுக்களாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 28,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மகளிர் சுய உதவி
குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைவிட சற்று அதிகமாக 30,000 கோடி
ரூபாய் கடன் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல இந்த அரசு எப்பொழுதும் துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
“இன்று 417 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சி காலமே ஒரு தேசிய பேரிடர் என்று ஒரு சமூக வலைத்தள பதிவை கண்டேன். தமிழகத்திற்கு வந்த ஒன்றிய குழு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று பாராட்டினர். ஆனால் நிதி அமைச்சர் இதற்கு எதிராக அரசியல் செய்ய விரும்புகிறார்.
நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம்
நாங்கள் வரியாக கொடுத்த பணத்தையே திருப்பி நிதியாக கேட்கிறோம். நான் அநாகரிகமாக என்ன கூறினேன்? அப்பன் என்று கூறுவது கெட்ட வார்த்தையா?
வேண்டுமென்றால் முன்னர் திருத்திக் கொண்டது போல மரியாதைக்குரிய ஒன்றிய
அமைச்சரின் அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா அல்லது மாண்புமிகு அப்பா எனவும்
எடுத்துக் கொள்ளலாம்.
மழை பாதித்த தென்மாவட்டங்களில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் முகாமிட்டு
தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நமது முதலமைச்சர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதித்த இடங்களில் அனைவருமே களத்தில் நின்றோம். ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி அரசியலாக மாற்ற விரும்பவில்லை”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/nirmalasitharaman-uniongovttngovt-chennaiudhayanidhistalin.html