வியாழன், 21 டிசம்பர், 2023

விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

 

ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி
வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அடுத்துள்ள மூலக்கரை கிராமத்தில் பிரபல தனியார் ஆயில் தயாரிப்பு ஆலை
செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆயில்கள், உள்நாடு
மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறும் கழிவுகளால், அப் பகுதியை சுற்றியுள்ள கூறப்பாளையம், கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு
கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர், கிணறு,
ஆழ்துளை கிணறு போன்றவைகளும் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.


தனியார் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலைக்கு எந்தவித அனுமதியும் அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஈரோடு சென்னிமலை
சாலையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்த மூலக்கரை கிராமத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது,

“ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக காற்று மாசுடைந்து வரும் நிலையில், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த தனியார் ஆலைக்கு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது.

சம்பந்தப்பட்ட தனியார் ஆலையில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, சுத்தமான காற்று மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு கேன்சர் ,உள்ளிட்ட சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதால் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://news7tamil.live/action-caused-pollution-agricultural-lands-public-protest.html