நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக, மக்களவையில் இருந்து இன்றும் 3 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13-ம் தேதி கடந்த 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. அப்போது மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர்.
அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இச்சூழலில், அதே கோரிக்கையை முன் வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் மக்களவை எம்.பி.க்கள் 33 பேர் மற்றும் மாநிலங்கலவை எம்.பி.க்கள் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதே கோரிக்கை முன்வைத்து இன்று அமலியில் ஈடுபட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்றும் இரண்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கேரள காங்கிரஸ் (மணி)யைச் சேர்ந்த தாமஸ் சாழிகடன் மற்றும் சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த ஏ.எம்.அரிஃப் ஆகிய இருவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்றும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், நகுல்நாத் மற்றும் தீபக் பைஜ் ஆகியோர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் மற்றும் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
“எதிர்க்கட்சிகள் சபையில் இருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. இது ஒரு கிரிக்கெட் போட்டியில் பீல்டர்கள் இல்லாமல் பேட்டிங் செய்வது போன்றது. அவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் தொலைநோக்கு சட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் அதைப் பற்றி எந்த விவாதத்தையும், கருத்து வேறுபாடுகளையும் விரும்பவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது:
“நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஏன் நடந்தது, யார் பொறுப்பு என்று நாங்கள் கேள்வி எழுப்ப விரும்பினோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசாதது வருந்தத்தக்கது. பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விளக்கமளிக்க சபைக்கு வாருங்கள் என்றோம்.
ஆனால் பிரதமர் மோடி அவமரியாதை செய்துள்ளார். அவர் வாரணாசி, அகமதாபாத்தில் தொலைக்காட்சியில் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. இது கண்டிக்கத்தக்கது மற்றும் இது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறுவதாகும்” என்று குற்றம் சாட்டினார்.
source https://news7tamil.live/3-mps-suspended-in-lok-sabha-today-karthi-chidambaram-criticized-mp-for-batting-without-a-fielder.html