சனி, 23 டிசம்பர், 2023

அதிகரிக்கும் இந்தியாவின் கடன்: எச்சரித்த சர்வதேச நாணய நிதியம்!

 

இந்தியாவின் கடன் 2028-ம் ஆண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அதை மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அதில் நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. எனவே இந்திய மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும், தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும் IMF வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு மறுப்பு

ஆனால் IMF-ன் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. பெரும்பாலும் உள்நாட்டு நாணயத்திலேயே கடன்கள் பெறப்பட்டுள்ளதால், பெரும் அளவில் அபாயம் ஏற்படாது என சர்வதேச நிதியத்தில் இந்திய நிர்வாக இயக்குநர் கே.பி.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மத்திய, மாநில அரசுகளின் கடனுக்கான விகிதமும் 2005-06 ல் 81% இருந்து பின்னர் 2021-22-ம் ஆண்டு 84% அதிகரித்துள்ளதையும், ஆனால் 2022-23-ம் ஆண்டு இது 81% ஆக மீண்டும் குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய மதிப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் தலையீடு அதிகமாக உள்ளது என்று IMF மற்றொரு கருத்தை கூறியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் கண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ரிசர்வ் வங்கி,  இதனால் நிலையற்ற தன்மையில் இருந்த ரூபாய் மதிப்பு Stabilized Arrangement என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே IMF-ம் கருத்து சரியானது அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/rising-indias-debt-international-monetary-fund-warned-union-finance-ministry-denied.html

Related Posts: