திங்கள், 25 டிசம்பர், 2023

இ.டி அதிகாரிகள் மீது மதுரை போலீஸ் வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசாரை தடுத்ததாக புகார்

 

திண்டுக்கலைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க, அவரிடம் இருந்து மதுரை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம்  லஞ்சம் வாங்க முயன்ற போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிச.1-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக மதுரை தபால் தந்தி நகரில் இயங்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை செய்ய அன்று பிற்பகல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சென்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சத்யசீலன் தலைமையிலான போலீசார் சென்றனர்.

ஆனால் அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ய விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரை அலுவலத்தில் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மணி நேரம் கழித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அங்கித் திவாரி அறையில் சோதனை செய்தனர். 

இந்நிலையில், மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை செய்ய சென்ற போது தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/ankit-tiwari-case-fir-filed-against-madurai-ed-officers-2051073