முந்தைய பா.ஜ.க அரசு கொண்டு வந்த ஹிஜாப் தடை உத்தரவை திரும்பப் பெறுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இனி மாணவிகள் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தொடங்கலாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று (டிச.22) வெள்ளிக் கிழமை தெரிவித்தார்.
மைசூரில் புதிய காவல் நிலையங்கள் திறப்பு விழாவில் பேசிய சித்தராமையா, “ஹிஜாப் தடை உத்தரவை திரும்பப் பெறுவோம். உத்தரவை திரும்ப பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆடை அணிவது, விருப்பமான உணவை உண்பது அவர் அவர்களது விருப்பம்” என்று கூறினார்.
முந்தைய பா.ஜ.க அரசு கடந்த பிப்ரவரி 2022-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் சீருடைகளை கட்டாயமாக்கியது. சீருடை உடன் வேறு எந்த ஆடைகளையும் அணியக் கூடாது என்று உத்தரவிட்டது. இதற்காக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்புக் குழுக்களை நியமித்தது. ஹிஜாப் தடை உத்தரவு கர்நாடகாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் இதன் காரணமாக மாணவர்கள் இருதரப்பினர் இடையே போராட்டம் வெடித்தது.
முதல்வர் சித்தராமையா தனது X பக்கத்தில், பா.ஜ.க உடை, சாதி, மதம் அடிப்படையில் மக்களைப் பிரித்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வருகிறது. முந்தைய கர்நாடக பா.ஜ.க அரசின் ஹிஜாப் தடையை திரும்பப் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்,
'ஹிஜாப் குறித்த அரசின் உத்தரவை உடனடியாக மாற்ற முடியாது. இதற்கு சட்டப் போராட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். திடீரென்று, ஹிஜாப் மீது தடை விதிக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை" என்று கூறினார்.
ஹிஜாப் மீதான தடையை திரும்பப் பெறுவது என்பது கர்நாடக காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். கர்நாடக அரசின் பிப்ரவரி உத்தரவை எதிர்த்து முஸ்லிம் பெண்கள்
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, மார்ச் 2022-ல் நீதிமன்றம் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அக்டோபர் 2022-ல் உச்ச நீதிமன்றம் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
source https://tamil.indianexpress.com/india/hijab-will-be-allowed-in-schools-and-colleges-cm-siddaramaiah-2049108