புதன், 27 டிசம்பர், 2023

தீர்வு காணாவிட்டால் காசா, பாலஸ்தீனத்தின் கதியை சந்திக்கும் இந்தியா’ - ஃபரூக் அப்துல்லா

 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நமது அண்டை நாடுகளை மாற்ற முடியாது” என்றும், நட்புறவு பேணப்பட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறும் என்பதை வலியுறுத்தினார்.


நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று விமர்சித்த மக்களவை எம்.பியும் தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபரூக் அப்துல்லா செவ்வாய்கிழமை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் காசாவுக்கு நேர்ந்த கதியை இந்தியா சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நமது அண்டை நாடுகளை மாற்ற முடியாது” என்றும், நட்புறவு பேணப்பட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறும் என்பதை வலியுறுத்தினார்.

“நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியிருந்தார். அண்டை வீட்டாரோடு நட்பாக இருந்தால் இருவரும் முன்னேறுவார்கள். மேலும், போர் இப்போது ஒரு விருப்பமாது அல்ல என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். உரையாடல் எங்கே? நவாஸ் ஷெரீப் (பாகிஸ்தான்) பிரதமராகப் போகிறார் & நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயார் என்று சொல்கிறார்கள், ஆனால், நாங்கள் பேசத் தயாராக இல்லை என்பதற்கு என்ன காரணம்? பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலால் குண்டுவீசி தாக்கப்படும் காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட கதியையே நாமும் சந்திக்க நேரிடும்…” என்று ஃபரூக் அப்துல்லா கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் டெஹ்ரா கி காலி (டி.கே.ஜி) அருகே இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மக்களவை எம்.பி-யின் சமீபத்திய கருத்துக்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக விசாரணைக்காக பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட 8 பொதுமக்களில் 3 பேர், டோபா பிர் பகுதியில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆளும் பா.ஜ.க-வின் கருத்துகளை ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார். யூனியன் பிரதேசத்தில் அமைதி திரும்பியுள்ளதாக அரசாங்கம் கூறும்போது உள்ளாட்சி தேர்தல்களை அரசாங்கம் ஏன் நடத்தவில்லை என்று கேட்டார். “அவர்கள் இயல்பு நிலை என்று கூறுகின்றனர். ஆனால், தேர்தலை நடத்த முடியவில்லை. கார்கிலில் தேர்தல் நடத்த முடியுமானால், ஜம்மு காஷ்மீரில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு ஜனவரியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் இந்தியாவுடன் அமைதியாக வாழ விரும்புவதாகவும், காஷ்மீர் போன்ற எரியும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் ஆகஸ்ட் மாதத்திலும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்துப் போராடும் இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல என்று கூறியதால், அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஷெரீப் முன்வந்தார்.

இருப்பினும், எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கையை கைவிடும் வரை, அண்டை நாட்டுடன் இயல்பான உறவை கொண்டிருக்க முடியாது என இந்தியா கூறி வருகிறது.

“பயங்கரவாதத்தை இயல்பாக்குவதை நாம் அனுமதிக்க முடியாது; பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது அடிப்படையாக மாறுவதை அனுமதிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில், இது மிகவும் பொதுவான அறிவுப்பூர்வமான கருத்து” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/farooq-abdullah-says-india-could-meet-same-fate-as-gaza-and-palestine-if-not-2053012