தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் ‘இந்தி பேசுபவர்கள் கக்கூஸ் கழுவுகிறார்கள்’ என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பா.ஜ.க-வினர் வைரலாக்கி சர்ச்சையான நிலையில், பா.ஜ.க தலைவர் தருண் விஜய் தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்று இனவெறி கருத்து தெரிவித்த பழைய வீடியோவை தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், இந்தியில் பேசியபோது, அந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, நிதீஷ் குமாரின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனால், கோபம் அடைந்த நிதீஷ் குமார், இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியதோடு, மொழிபெயர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேடையில், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினும் உடன் இருந்தார். ஆனால், நிதீஷ் குமாரின் கருத்துக்கு டி.ஆர். பாலு, மு.க. ஸ்டாலின் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.
2021-ம் ஆண்டு, சென்னை விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கனிமொழியிடம் இந்தி தெரியாது என்பதற்காக கடுமையாக நடந்துகொண்டபோது, இதற்கு அப்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என டி சர்ட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், நிதீஷ் குமார் இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் கற்றுகொள்ள வேண்டும் என்று பேசியபோது, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு அமைதியாக இருந்தது குறித்து அ.தி.மு.க, நா.த.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். அதே நேரத்தில் பா.ஜ.க ஆதரவாளர்கள், இதை இந்தியா கூட்டணியில் பிளவு என்று கருத்து தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக்கினார்கள்.
இந்நிலையில்தான், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் 2019-ல் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய பழைய வீடியோ ஒன்று சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், தமிழ்நாட்டிற்கு வரும் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து ஹிந்தி பேசுபவர்கள் கட்டுமானப் பணி அல்லது சாலைகள் அமைப்பது மற்றும் கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலைதான் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையானது.
இந்த வீடியோவை ஷேஜாத் பூனவல்லா உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும், அவர் தி.மு.க எம்.பி-க்கு எதிராக பேசாததற்காக இந்தியா கூட்டணி தலைவர்களை கடுமையாக சாடினார்.
மேலும், இந்தியா கூட்டணியின் நோக்கம், சனாதன தர்மத்தைப் அவமதித்து நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி பிரித்தாளும் திட்டம் என்று பூனவல்லா கூறினார்.
தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன், ஆங்கிலம் கற்றவர்களையும், இந்தி மட்டும் கற்றவர்களையும் ஒப்பிட்டு, ஆங்கிலம் படித்தவர்கள் ஐடி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள், இந்தி படித்தவர்கள் அடிமட்ட வேலைகளைச் செய்கிறார்கள் என்று பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. மேலும், ‘இந்தி பேசுபவர்கள் கக்கூஸ் கழுவுகிறார்கள்’ என்று தயாநிதி மாறன் கூறிய பழைய வீடியோவை பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாகினார்கள்.
இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் செயல்படும் தி.மு.க ஆதரவு நெட்டிசன்கள், பா.ஜ.க தலைவர் தருண் விஜய் தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்று இனவெறி கருத்து தெரிவித்த பழைய வீடியோவை தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பா.ஜ.க தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிற விதமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/india/dmk-mp-dayanidhi-maran-toilet-hindi-speaks-row-vs-bjp-tarun-vijay-south-indians-are-blacks-row-video-2051637