வரும் 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் சார்பில் 16 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக டி.எஸ். சிங் தேவ் செயல்படுவார்.
காங்கிரஸ் மூத்த தலைவா்களான சித்தராமையா, பிரியங்கா காந்தி, ஆனந்த் சா்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா், ஜிக்னேஷ் மேவானி, கைக்கங்கம், கௌரவ் கோகோய், பிரவீன் சக்ரவர்த்தி, இம்ரான் பிரதாப்கார்ஹி, கே ராஜு, ஓம்கார் சிங் மார்க்கம், ரஞ்சித் ரஞ்சன், குர்தீப் சப்பல் உள்ளிட்ட 14 போ் உறுப்பினா்களாக செயல்படுவா், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
சிதம்பரம் 2019 ஆம் ஆண்டிலும் தேர்தல் அறிக்கை குழுவிற்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அகில இந்திய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க ஐந்து பேர் கொண்ட தேசியக் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவிற்கு மோகன் பிரகாஷ் தலைமை தாங்குகிறார்.
அதில், முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒப்புக்கொள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் 4 மாநிலங்களில் தோல்விய சந்தித்து இருந்தாலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் இன்னும் கவனம் செலுத்தினால் அங்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்றலாம் என காங்கிரஸ் நம்புகிறது.
source https://tamil.indianexpress.com/india/congress-lok-sabha-election-2024-p-chidambaram-rahul-gandhi-2049026