பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்க்கு 8 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டு, 4 மாதங்கள் ‘Disqualified MP’ ஆக இருந்தார் ராகுல் காந்தி. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவால் ராகுல் காந்திக்கு எம்.பி பதவி மீண்டும் கிடைத்தது.
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்றே பெயர் உள்ளது எப்படி?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நரேந்திர மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். ஆனால், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் 23ஆம் தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் உச்சபட்ச தண்டனையாக ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து மக்களவை செயலகம் உடனடியாக உத்தரவிட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் துக்ளக் சாலையில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராகுல் காந்தி ஏப்ரல் 4ஆம் தேதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டதாக அப்போது தகவல்கள் பரவின.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை ஆகஸ்ட் 7ஆம் தேதி வழங்கியது.
இதையடுத்து, அன்றே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்குச் சென்றார் ராகுல் காந்தி. நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்ற அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திலும் பங்கேற்றார்.
ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மீண்டும் வழங்கி, மக்களவை செயலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்து, ‘இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று குறிப்பிட்டது. எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில் ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்றத்தக்கதல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதானி ஆகியோரை பிக்பாக்கெட் திருடர்கள் என ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியது சரியல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 8 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://news7tamil.live/rahul-gandhis-criticism-of-prime-minister-modi-is-not-acceptable-delhi-high-court.html