சனி, 23 டிசம்பர், 2023

குஜராத் கிஃப்ட் சிட்டியில் மதுவிலக்கு ரத்து: காரணம் என்ன?

 Gujarat: குஜராத்தில் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 1960 மே 1ம் தேதி குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்ட நிலையில், மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், மாநிலம் உருவானதில் இருந்து மதுபானங்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத் காந்திநகரில் உள்ள இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT City - கிஃப்ட் சிட்டி) "உலகளாவிய வணிக சூழலை" வழங்கும் முயற்சியில், குஜராத் அரசு நேற்று வெள்ளிக்கிழமை கிஃப்ட் சிட்டி பகுதியில் மட்டும் மதுபானம் மீதான தடையை நீக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் தடை நடைமுறையில் அமலில் இருக்கும் அதேவேளையில் அந்தப் பகுதிக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. கடந்த காலத்தில் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற விலக்கு அளிக்கப்படவில்லை.

கிஃப்ட் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு "மதுபானம் வழங்க அனுமதி" வழங்கப்படும் என்றும், இந்த நிறுவனங்களுக்கு வரும் விருந்தினர்கள் அவர்களின் நிரந்தர ஊழியர்களின் முன்னிலையில் மதுபானம் அருந்து வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விலக்கு 10வது மூன்று நாள் குஜராத் உச்சிமாநாடு தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் அதன் கிளையை கிஃப்ட் சிட்டியில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக குஜராத் மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிஃப்ட் சிட்டி ஒரு உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்துள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகளால் பரபரப்பாக இயங்கி வருகிறது. உலக முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு உலகளாவிய வணிக சூழலை வழங்குவதற்காக  கிஃப்ட் சிட்டி பகுதியில் 'ஒயின் மற்றும் உணவு' வசதிகளை அனுமதிக்க தடை விதிகளை மாற்ற வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

புதிய கொள்கையின்படி, கிஃப்ட் சிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளுக்கு மது மற்றும் உணவு வசதிகளுக்கான அனுமதி வழங்கப்படும். இந்த வசதிகளில் மது அருந்தலாம் என்றாலும், மது பாட்டில்களை விற்க அனுமதிக்கப்பட மாட்டாது. 

கிஃப்ட் சிட்டி பகுதியில் அதிகாரப்பூர்வமாக பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது அதிகாரப்பூர்வ விருந்தினர்கள் மது மற்றும் உணவு வசதிகளுக்காக இதுபோன்ற ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளுக்குச் செல்ல முடியும். 

கிஃப்ட் சிட்டியின் அனைத்து ஊழியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் மதுபானம் வழங்க அனுமதி வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி அவர்கள் மது அருந்தலாம். இது தவிர, நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களின் விருந்தினர்கள் தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தி வழக்கமான ஊழியர்கள் முன்னிலையில் மது அருந்தலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிஃப்ட் சிட்டி 886 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. 261 ஏக்கரில் மல்டி சர்வீஸ் ஸ்பெஷல் எகனாமிக் மண்டலம் (SEZ) மற்றும் 625 ஏக்கர் உள்நாட்டு கட்டணப் பகுதி (DTA) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டின் முதல் சர்வதேச நிதிச் சேவை மையத்தையும் (IFSC) கொண்டுள்ளது.

இங்கு ஐ.பி.எம் (IBM), பேங்க் ஆப் அமெரிக்கா (Bank of America), எச்.எஸ்.பி.சி (HSBC), ஓரக்கல் (Oracle), பீப்ஃரீ (Beefree), சிட்டி பேங்க் (Citibank), டியூட்சே பேங்க் (Deutsche Bank), பி.டபிள்யூ.சி (PWC) போன்ற கார்ப்பரேட்டுகள் ஏற்கனவே கிஃப்ட் சிட்டியில் அலுவலகங்களை நிறுவியுள்ள நிலையில், அங்கு சுமார் 20,000 பேர் அங்கு பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கிஃப்ட் சிட்டியி பணிபுரிபவர்களில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமானோர் மட்டுமே இப்பகுதியில் வசிக்கின்றனர்.

உயர்தரம் உள்ளிட்ட வீட்டுத் திட்டங்களுக்கான திட்டங்கள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பகுதியில் ஒரு சர்வதேச பள்ளி, கட்டுமானத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் நட்சத்திர ஹோட்டல் மற்ற வசதிகளுடன் உள்ளது. 

கடந்த ஏப்ரல் 2022ல், சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், கிஃப்ட் சிட்டி வேலை நேரத்திற்குப் பிறகு "ஒரு பேய் நகரம்"உள்ளது என்று கூறியிருந்தார். 


source https://tamil.indianexpress.com/india/global-ecosystem-gujarat-lifts-liquor-ban-in-gift-city-tamil-news-2049100