சனி, 30 டிசம்பர், 2023

நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

 30 12 2023 நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த மே 19-ஆம் தேதி 865 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கரோனா பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்புகள் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வந்த நிலையில், கடந்த டிச.5-ஆம் தேதிமுதல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கேரளத்தில் இருவர், தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரத்தில் தலா ஒருவர் என மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,091-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல நாடு முழுவதும் புதிய வகை கொரோனா  ‘ஜெஎன்.1’ பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 162 பேருக்கு இவ்வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் அதிகபட்சமாக 83 பேர், குஜராத்தில் 34 பேர், கோவாவில் 18 பேர், கர்நாடகத்தில் 8 பேர், மகாராஷ்டிரத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 5 பேர், தமிழகத்தில் 4 பேர், தெலங்கானாவில் 2 பேர், தில்லியில் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது


source https://news7tamil.live/797-people-were-confirmed-to-be-infected-with-corona-virus-in-a-single-day-across-the-country.html