செவ்வாய், 12 டிசம்பர், 2023

370-வது பிரிவு ரத்து... உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்: ‘ஏமாற்றம் அளிக்கிறது’- ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கருத்து

 JK Azad Omar Abdullah

ஜம்மு - காஷ்மீர் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஒமர் அப்துல்லா (பி.டி.ஐ/எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்)

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா,  “ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் மனமுடைந்து விடவில்லை. போராட்டம் தொடரும். பா.ஜ.க-வுக்கு இங்கு வர பல பத்தாண்டுகள் ஆனது. நாங்களும் இதற்கு தயாராக இருக்கிறோம். நீண்ட தூரம்.” என்று கூறினார்.

ஜம்மு - காஷ்மீரில் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தலைவர்களும் 370-வது பிரிவை ரத்து செய்தது அரசியலமைப்பு அதிகாரத்தை உறுதி செய்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறினர்.

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டி.பி.ஏ.பி) தலைவரும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், “உச்சநீதிமன்றம் எங்கள் கடைசி நம்பிக்கையாக இருந்தது” என்றும், அவர்களின் தீர்ப்பில் “ஏமாற்றம்” அடைந்ததாகவும் கூறினார். “ஒருமித்த தீர்ப்பால் ஜம்மு காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அரசியலமைப்பின் 370 மற்றும் பிரிவு 35ஏ ஆகியவை நமது மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன... இரண்டும் இன்றுடன் முடிவடைந்துவிட்டன. இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும், நமது நிலம் விலை உயர்ந்ததாக மாறும். இப்போது, நாடு முழுவதிலுமிருந்து அனைவரும் ஜம்மு காஷ்மீருக்கு வரலாம், அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பெரிய தொழில்கள் எங்களிடம் இல்லை. எங்கள் மிகப்பெரிய தொழில் சுற்றுலா, இது குறைந்த வேலைகளைக் கொண்டுள்ளது. எப்படியும் சில அரசு வேலைகள் உள்ளன, இப்போது அனைவரும் அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம், இது நமது இளைஞர்களிடையே வேலையின்மையை அதிகரிக்கும்,”  என்று கூறினார்.

மேலும், “ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370 ஐ நீக்கம் செய்தது தவறு… அது அவசரத்தில் செய்யப்பட்டது, மேலும் அவர்கள் ஜம்மு காஷ்மீர் கட்சிகளுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம் என்று பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி கூறினார். “சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, அதனால்தான் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நம்முடைய இழப்பு அல்ல, இந்தியா என்ற எண்ணத்தின் இழப்பு” என்று மெகபூபா  முஃப்தி கூறினார்.

“ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கவோ அல்லது கைவிடவோ போவதில்லை. கெளரவம் மற்றும் கண்ணியத்திற்கான எங்கள் போராட்டம் பொருட்படுத்தாமல் தொடரும். இது எங்களுக்கான பாதையின் முடிவு அல்ல” என்று மெகபூபா முப்தி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா, “ஏமாற்றம், ஆனால் வருத்தப்படவில்லை” என்றார். ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,  “போராட்டம் தொடரும். பா.ஜ.க-வுக்கு இங்கு வர பல பத்தாண்டுகள் ஆனது. நாங்களும் நீண்ட தூரத்திற்கு தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மக்கள் மாநாட்டின் உறுப்பினருமான சஜாத் லோன்,  “ஜம்மு காஷ்மீர் மக்களிடம் இருந்து மீண்டும் நீதி நழுவிட்டது” என்று கூறினார்.

“370-வது பிரிவு சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால், அது எப்போதும் நமது அரசியல் விருப்பங்களின் ஒரு பகுதியாக இருக்கும். மாநில அந்தஸ்து விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அது பற்றி கருத்து கூறுவதையும் புறக்கணித்தது. இதனால், முன்னுரிமையை மேற்கோள் காட்டி முழு நாட்டையும் எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்கிறது. இருப்பினும், அதே தவறான பயன்பாடு ஜம்மு - காஷ்மீரில் நுட்பமாக அங்கீகரிக்கப்பட்டது. எதிர்காலத் தேதியில் நீதி அதன் பாசாங்கு தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும் என்று நம்புவோம்” என்று சஜாத் லோன் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பின் 370 வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த 2019-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “CO 272 ஐ வெளியிடுவதற்கு 370(1)(டி) பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தவறானது அல்ல. சட்டப்பிரிவு 370(3)ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தும் குடியரசுத் தலைவர் ஒருதலைப்பட்சமாக 370-வது பிரிவை நிறுத்தும் அறிவிப்பை வெளியிடலாம்.” என்று கூறியது.


source https://tamil.indianexpress.com/india/supreme-court-verdict-on-abrogation-of-article-370-jammu-and-kashmir-leaders-disappointed-2001154