கடந்த 10 ஆண்டுகளின் அநியாயங்களை முன்னிலைப்படுத்தி, அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு பாரத் ஜோடா நியாய யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா எனும் பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14-ம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் 20-ம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கவுள்ளார். சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“ராகுல் காந்தி தொடங்க உள்ள ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்களை முன்னிலைப்படுத்தும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல. இது கொள்கை ரீதியிலானது. ‘அமிர்த காலம்’ குறித்த கனவுகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளின் உண்மை நிலவரம் என்ன? அது ஓர் அநியாய காலம்.
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல் மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும்” என தெரிவித்தார்.
source https://news7tamil.live/rahul-gandhis-nayaya-yatra-will-highlight-bjps-10-year-injustices-jairam-ramesh.html