இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, மாநில அரசுகளுடன் இணைந்து ‘ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனிடையே இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 5.33 கோடி வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15, 2019 வரை நாட்டின் 16.81% கிராமங்களில் உள்ள வீடுகளில்தான் குடிநீர் இணைப்பு இருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி நிலவரப்படி, 72.29% கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளது மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது.
மிசோரத்தில் 98.35%, அருணாசலப் பிரதேசத்தில் 97.83%, பீகாரில் 96.42%, லடாக்கில் 90.12%, சிக்கிமில் 88.54%, உத்தரகாண்டில் 87.79%, நாகாலாந்தில் 82.82%, மகாராஷ்டிராவில் 82.64% கிராமங்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டில் 78.59%, மணிப்பூரில் 77.73%, ஜம்மு & காஷ்மீரில் 75.64%, திரிபுராவில் 75.25%, சத்தீஸ்கரில் 73.35%, மேகாலயாவில் 72.81%, உத்தரப் பிரதேசத்தில் 72.69%, ஆந்திராவில் 72.37%, கர்நாடகாவில் 71.73%, ஒடிசாவில் 69.20%, அஸ்ஸாமில் 68.25%, மத்தியப் பிரதேசத்தில் 59.36%, கேரளாவில் 51.87% கிராமங்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, தெலங்கானா, குஜராத், கோவா, அந்தமான் & நிகோபார், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/5-33-crore-rural-houses-do-not-have-drinking-water-connection-central-govt.html