திங்கள், 1 ஜூலை, 2024

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பேற்பார்கள்” எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


source https://news7tamil.live/thoothukudi-shooting-incident-murder-case-against-accused-officers-madras-high-court-takes-action.html