மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பட்டூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர்- ஆசிரியைகளை கொண்ட இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பாப்பா என்பவர் பணியாற்றி வருகிறார்
இந்நிலையில் பட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. படிப்பதற்காக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை இச்செயலில் ஈடுபட செய்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். வீடியோ வெளியானதை யடுத்து இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவ,மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவிகள் தங்களை கழிவறையை சுத்தம் செய்ய கோரி ஒருவர் வீடியோ எடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை பாப்பா கூறுகையில், வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மேலாண்மை குழு தலைவராகவும், காலை சிற்றுண்டி தயார் செய்பவருமான கவிதா என்பவர் காழ்புணர்ச்சி காரணமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக மாணவர்களை பட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தப்படுத்த செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிகாரிகள் விசாரணையில் உண்மை வெளிவரும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தின் அரசு பள்ளியின் கழிவறையை மாணவ, மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilandu-madurai-school-girls-clean-toilets-video-viral-6984973