வியாழன், 14 நவம்பர், 2024

மணிப்பூரில் தொடரும் கொடூரம்

 மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகியுள்ளனர்.

மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதலில் 10 பேர் எண்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். இந்த மோதலுக்கு இடையே மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் என 6 பேரை குக்கி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும்.

இதுதொடர்பாக மணிப்பூர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜிரிபாமில் இருந்து இடம்பெயர்ந்த 13 பேர் நேற்று மாயமாகி உள்ளனர். இதில் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். 2 பேர் இறந்து கிடந்தனர். ஆறு பேர் காணவில்லை. இரண்டு உடல்களும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த லயிஷ்ராம் பலேம், மைபம் கேஷோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் இருவரின் உடலும் கைப்பற்றப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் எண்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காவல் நிலையத்தையும், பாதுகாப்பு முகாமையும் நோக்கி தாக்குதல் நடத்தியவர்கள். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர்” என தெரிவித்தார்.



source https://news7tamil.live/the-horror-continues-in-manipur-2-elderly-people-burned-alive-and-murdered-6-people-including-children-missing.html