வியாழன், 14 நவம்பர், 2024

#Wayanad இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவு!

 

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வயநாட்டு தொகுதியில் 14 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், வயநாடு இடைத்தேர்தல் இன்று (நவ.13) நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தினர். வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தபோது காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கல்பெட்டா, வைத்திரி பகுதி வாக்குச் சாவடிகளை நேரில் பார்வையிட்டார். வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


source https://news7tamil.live/62-39-voter-turnout-in-wayanad-by-election.html