மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது, ஆதாரமற்றது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் மாதம் வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு ஆளுநர் தாமதம் செய்வதாகக் ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் தாமதம் செய்கிறார், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது, ஆதாரமற்றது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் மாதம் வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை எனவும் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ பதிவுகள், 2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 211 மசோதாக்கள் கிடைத்துள்ளன. இதில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அவற்றில் 95 சதவீத மசோதாக்கள் மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் 13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன; இந்த மசோதாக்களில் 60 சதவீதம் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 மசோதாக்கள் அக்டோபர், 2025 கடைசி வாரத்தில் வந்தவை. அவை இன்னும் பரிசீலனையில் உள்ளன. இந்த விவரங்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும்.
சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சட்டப்பேரவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 10 மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை யு.ஜி.சி விதிகளுக்கு முரணானவை. சட்டப்பேரவையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்பதால், அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஆளுநர் அனுப்பி வைத்தார்.
இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செய்ல்பட்டு வருகிறார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் கவர்னர் ஒவ்வொரு மசோதாவையும் ஆய்வு செய்துள்ளார். மாநில மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஜனநாயக செயல்முறைகளுக்கு உட்பட்டு, தனது அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார். அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பிற்கு உட்படுவதை உறுதி செய்வதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மக்கள் மீது ஆளுநர் மிகுந்த மரியாதை கொண்டுள்ளார். தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் இலக்கியங்களை முன்னிலைப்படுத்தும் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழியியல் முயற்சிகளை ஆதரித்து வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஆளுநரின் ஆழ்ந்த மரியாதையை வலுப்படுத்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் அவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுகிறார்” என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-raj-bhavan-clarifies-allegations-baseless-and-governor-clears-81-per-cent-bills-13-per-cent-bills-only-sent-to-president-10636584





