ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் - அமெரிக்கா: தலைநகரில் சரமாரி அட்டாக்; வெடிக்கும் போர்
/indian-express-tamil/media/media_files/2026/02/28/america-2026-02-28-13-30-16.jpg)
ஈரானிடம் அணுசக்தி இருக்கும் நிலையில் தங்களின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
மேலும், ஈரான் அருகே தனது 2 சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா. டிரம்ப் லேசாக கண் அசைத்தால் போதும் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் திடீரென இன்று இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரானை குறிவைத்து சரமாரியாக தாக்குதலை தொடங்கியுள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஈரான் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தாக்குதலை இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதி செய்துள்ளார். அவர் கூறியதாவது ''ஈரானுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் முன்கூட்டிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எட்டு நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டு, ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது, “ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானிடம் இருந்து வரும் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரான் ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்கி அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்” என்றார்.
இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியர்கள் தற்போதைய நிலவரம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும், இந்தியத் தூதரகத்திடமிருந்து வரும் கூடுதல் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூதரகத்தின் அவசர உதவி எண்கள்
+989128109115
+989128109109
+989128109102
+989932179359





