ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

செங்கோட்டையை தகர்க்க நடந்த சதி:

 

22 2 2026

Delhi Police

செங்கோட்டையை தகர்க்க சதி: தமிழ்நாடு, மே.வங்கத்தில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்கள் கைது

இந்தியாவின் முக்கிய அடையாளமான டெல்லி செங்கோட்டை மற்றும் பிரசித்திபெற்ற கோயில்களை தகர்க்க சதிசெய்ததாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் வங்கதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 8 பேரை டெல்லி போலீசார் நேற்று (பிப்.21-ல்) கைது செய்து உள்ளனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிக்கிய 6 பேர்

மத்திய உளவுத்துறையின் ரகசியத் தகவலின் பேரில், டெல்லி போலீசார் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் (Garment Factory) தங்கி வேலை செய்து வந்துள்ளனர். தங்களது அடையாளத்தை மறைக்க இவர்கள் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

செங்கோட்டை, கோயில்களுக்கு மிரட்டல்

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் முக்கிய மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைக் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. டெல்லி செங்கோட்டை, சாந்தினி சௌக் பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களை ஐ.இ.டி (IED) வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த பிப்.6-ம் தேதி இஸ்லாமாபாத் மசூதி வெடிப்புச் சம்பவத்திற்குப் பழிவாங்க இந்தச் சதி தீட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துகளை பகிர்ந்து வந்ததும், வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் உடன் (Foreign Handlers) தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணையில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. கைதானவர்களில் 4 பேர் ஏற்கனவே டெல்லிக்கு சென்று, சர்வதேச மாநாட்டின் போது அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் "Free Kashmir" போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதன் பின்னரே இவர்கள் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

கடந்த 2025 நவம்பர் மாதம் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், தற்போது மீண்டும் சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது. இதனால் டெல்லி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படைகள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரும் மேலதிக விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/india/8-suspects-linked-to-isi-and-bangladesh-based-extremist-groups-arrested-in-tamil-nadu-and-west-bengal-for-targeting-delhis-red-fort-and-temples-11144775