/indian-express-tamil/media/media_files/2026/02/22/kadahar-2026-02-22-14-42-16.jpg)
தி.மு.க கூட்டணியில் ஐ.யு.எம்.எல்-க்கு எத்தனை சீட்? அறிவாலயத்தில் மயங்கிய ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மைதீன்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல் நாளே கூட்டணிக் கட்சிகளின் தொகுதி கோரிக்கைகளும், எதிர்பாராத உடல்நலக் குறைவு சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் காங்கிரஸ் 25 இடங்களிலும், ம.தி.மு.க, வி.சி.க., சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களிலும், ஐ.யு.எம்.எல், கொ.ம.தே.க தலா 3 இடங்களிலும், ம.ம.க 2 இடங்களிலும் போட்டியிட்டன. இதர கட்சிகள் தலா 1 இடம் (மொத்தம் 234 தொகுதிகள்). இந்த முறை கடந்த முறையிருந்த கட்சிகளுடன் கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. மய்யத்திற்கு 3 இடங்களை ஒதுக்கிவிட்டு, தி.மு.க 170 இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்தன. இருப்பினும், கூட்டணிக்கட்சிகள் கூடுதல் தொகுதிகளை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் 41 தொகுதிகளுடன் ஆட்சியில் பங்கையும் கேட்டு வருகிறது. ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளை (10+) எதிர்பார்க்கின்றன.
ஐ.யு.எம்.எல் - திமுக பேச்சுவார்த்தை
இன்று அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க குழுவுடன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன் கூறியதாவது, நாங்க 5 தொகுதிகளைக் கேட்டோம், குறைந்தபட்சம் 4-வது தருமாறு வலியுறுத்தினோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/22/iuml-2026-02-22-14-39-18.jpg)
ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 3 இடங்களிலும் வெற்றி பெறவில்லை என்பதையும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய தி.மு.க, இரு தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது. எண்ணிக்கை முக்கியமல்ல, நல்லாட்சித் தொடர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு
செய்தியாளர் சந்திப்பு முடிந்து திரும்பியபோது, ஐ.யு.எம்.எல் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த ஆதரவாளர்கள் அவரை அண்ணா அறிவாலயத்திற்குள் கை தாங்கலாகத் தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் எப்போது?
தி.மு.க. தரப்பு மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 23 (நாளை)-ல் ம.தி.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPIM) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த முறை 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க, இம்முறை கூடுதல் இடங்களுடன் தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-seat-sharing-begins-how-many-seats-for-iuml-party-leader-kader-mohideen-faints-at-anna-arivalayam-11144636





