21 2 2026
/indian-express-tamil/media/media_files/2026/02/21/madurai-commissioner-2026-02-21-13-20-47.jpg)
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 12 ஒன்றியங்களில் பணிபுரியும் 158 ஊராட்சி செயலாளர்களை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவிலும், மாவட்ட அளவிலும் ஊராட்சி செயலா்கள், உதவியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த 158 ஊராட்சி செயலா்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்அனுமதி பெறாமல் தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அரசு ஊழியா் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதுகுறித்து ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் தெரிவிக்கையில்; எங்களின் போராட்டம் நியாயமானதாக இல்லை என்றால் அப்போதே எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். நாங்கள் போராட்டத்தை கைவிட்டு பணியில் சேரும்போது எங்களை பணியில் சேரக்கூடாது என அதிகாரிகள் கூறினா். இப்போது, பணியிடை நீக்கம் செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக மாநிலத் தலைமையின் ஆலோசனை பெற்று அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/158-panchayat-secretaries-suspended-across-12-unions-11141873





