/indian-express-tamil/media/media_files/2026/02/24/gorakpur-2026-02-24-13-54-29.jpg)
கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர், மர்ம நபர்களால் பின்தொடரப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி 25 வயதான அந்த மருத்துவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்ற அந்த பெண் மருத்துவர், அங்கிருந்து தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள், அவரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு விடாமல் பின்தொடர்ந்துள்ளனர். வழியெங்கும் அந்த பெண்ணை நோக்கி ஆபாசமான வார்த்தைகளை வீசியும், சைகைகள் செய்தும் வம்பிழுத்துள்ளனர். அவர் எய்ம்ஸ் நுழைவு வாயில் அருகே நெருங்கியபோது, அந்த கும்பல் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, தவறான முறையில் தொட்டு துன்புறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் சத்தமிடவே, அங்கிருந்தவர்கள் கூடுவதைக் கண்டு அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். வணிக வளாகம் முதல் எய்ம்ஸ் நுழைவு வாயில் வரை இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகளின் அடையாளம் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், அண்டை மாவட்டமான தியோரியாவைச் சேர்ந்த சூரஜ் குப்தா மற்றும் அம்ரித் விஸ்வகர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சிறு தொழில் செய்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் வடகிழக்கு மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வடகிழக்கு மாநிலப் பெண்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடும், பாலியல் துன்புறுத்தல்களும் வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போகக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற செயல்கள் நாகரீகமான சமூகத்திற்கு இழுக்கு என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் மீது பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/nagaland-doctor-molested-and-stalked-near-aiims-gorakhpur-two-arrested-after-cctv-trace-11150347





