/indian-express-tamil/media/media_files/2025/10/19/metro-2025-10-19-12-33-09.jpg)
சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த அனுதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் ஒரு பக்கம் வேமாக நடந்து வரும் நிலையில், பணிகள் முழுவதுமாக முடிந்த மெட்ரோ பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற்ற தீவிர ஆய்வு ஆய்வுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீட் டிரையல்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், பூந்தமல்லி முதல் போரூர் வரை மணிக்கு 90 கி.மீ வேகத்திலும், போரூர் முதல் வடபழனி வரை மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டன. ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் முதல் வாரத்தில் இந்த ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இந்த வழித்தடத்தில், பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முள்ளைத்தோட்டம், காரையன்சாவடி, குமனஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெல்லியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் ஜங்ஷன், வடபழனி உள்ளிட்ட 11 நிலையங்கள் உள்ளன. இது ஆளில்லா (Driverless) மெட்ரோ ரயிலாக இயங்கும். தொடக்கத்தில் 10 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. போரூர் ஜங்ஷன் முதல் சாலிகிராமம் வரை சில நிலையங்களில் சிவில் வேலைகள் முடியாததால் படிப்படியாக திறக்கப்படும் என்றும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையின் 2ம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கிய வழித்தடமாக இருப்பது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-poonamallie-vadapalani-metro-train-service-permission-update-in-tamil-11163597





