சனி, 2 மே, 2026

எனக்கு திருப்தி இல்லபா... ஈரான் வழங்கிய முன்மொழிவு; உடனே நிராகரிப்

1 5 2026 எனக்கு திருப்தி இல்லபா... ஈரான் வழங்கிய முன்மொழிவு; உடனே நிராகரிப்

 ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் பிப்ரவரி 28-ஆம் தேதி (2026) முதல் கூட்டு தாக்குதல் நடத்தி வந்தது. இந்த தாக்குதலில் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி உட்பட பலர் உயிரிழந்தனர். தற்போது இந்த தாக்குதலானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்த ஈரான் பல வழிகளில் முயன்று வருகிறது. 

அமெரிக்காவிற்கு ஈரானுக்கும் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்படுகிறது. இதற்கு முன்பே போரை நிறுத்துவதற்கான முன்மொழிவை ஈரான் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் 14 அம்ச திட்டங்கள் அடங்கிய புதிய முன்மொழிவை பாகிஸ்தான் மூலம் ஈரான் வழங்கியுள்ளது. ஆனால், இந்த முன்மொழிவு திருப்திகரமாக இல்லை என்று கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ”அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அதில் எனக்கு திருப்தி இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதில்லை. அங்கே யார் தலைவர் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. என்னால் ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்களை அவர்கள் கோருகிறார்கள்.

ஈரானிடம் இப்போது கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, பாதுகாப்புத் திறனும் மிக குறைவாகவே உள்ளது. மனிதநேய அடிப்படையில் அவர்களை அழிப்பதை காட்டிலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதையே நான் விரும்புகிறேன். இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை ஒரு வாய்ப்பாக தொடரும்” என்றார்.

ஈரான் வழங்கிய முன்மொழிவுகள்

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், தாக்குதல்களை நிறுத்துவதற்கான உத்தரவாதங்களை அளிப்பதற்கும் ஈடாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஈரான் முன்மொழிந்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்கா தனது முற்றுகையை முழுமையாக நீக்க வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை ஈரான் கைவிட்டுள்ளது.

அமெரிக்காவின் சாத்தியமான பொருளாதாரத் தடைத் தளர்வுகளுக்கு ஈடாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்கள் பிந்தைய நிலைக்கு ஒத்திவைக்கப்படும்.

அமெரிக்கா இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டால், பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவில் ஈரானின் ஏவுகணைத் திறன்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கா மோதலின் ஆரம்பத்தில் இருந்தே ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதை தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஈரான் ராணுவம் மற்றும் பொருளாதார அழுத்தத்தை தளர்த்துவதற்கே முன்னுரிமை அளித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

source https://tamil.indianexpress.com/international/trump-says-he-is-not-satisfied-irans-new-proposal-11788247