/indian-express-tamil/media/media_files/2026/02/17/sudalaiya-2026-02-17-21-11-50.jpg)
2030-க்குள் 33% மின் பேருந்துகள்... தமிழ்நாடு கால நிலை உச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன்படி தற்போது 4-வது காலநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, சுற்றுச்சூழல் துறையில் தமிழகத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, இத்துறையில் பணியாற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களுக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், காலநிலை மாற்றத்தை குறைக்க போக்குவரத்து துறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் தற்போது 380 மின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2030-க்குள் தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் 33% பேருந்துகளை மின் பேருந்துகளாக (E-buses) மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், 2027 வரை சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். இனிவரும் காலங்களில், தமிழக அரசின் அனைத்துத் துறைத் திட்டங்களும் காலநிலை நடவடிக்கையோடு இயைந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக 2030-க்குள் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்படும். தமிழகம் முழுவதும் நடவு செய்வதற்கு 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும். தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து பசுமை தொழில் நுட்பங்களில் முதலீடு செய்து, கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை அறிந்து உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும். இதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளைக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தலைவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-outlines-green-vision-at-climate-tamil-nadu-targets-33-electric-buses-by-2030-announces-cm-stalin-11123947





