திங்கள், 16 நவம்பர், 2026

ஒரே மாதத்தில் 3-வது தீவிர புயலை எதிர்கொள்ளும் ஆந்திரா;

 source https://tamil.indianexpress.com/india/andhra-pradesh-braces-for-third-intense-cyclone-in-a-month-12811844

16 11 2025

cyclone_7ab356

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் ஏற்கெனவே உருவான, அர்ணப் மற்றும் முரசு புயல்கள் ஆந்திராவில் கரையை கடந்தது. அதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் குறைவான கால இடைவெளியில் மற்றுமொரு வலுவான புயல் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைய உள்ளது. இது புயலாக வலுப்பெற்றதும், ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' (Akvan) என்ற பெயரால் அழைக்கப்படும். 

நவம்பர் 16-ஆம் தேதி வாக்கில் இது புயலாக உருவாகும் என்றும், நவம்பர் 18-ஆம் தேதி வரை நிலப்பரப்பை நோக்கிய இதன் நகர்வு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகளில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. 

மேலும், நவம்பர் 17-ஆம் தேதி மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் தீவிரப் புயலாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் உருவாகும் மூன்றாவது புயல் அக்வான் ஆகும். குறிப்பாக, வட இந்தியப் பெருங்கடல் படுகையில் (வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றை உள்ளடக்கியது) பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் உருவாகும் மூன்றாவது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 620 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜயபுரத்திற்கு மேற்கு-தென்மேற்கே 680 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 960 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கு-தென்கிழக்கே 1,070 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

வரவிருக்கும் புயலை முன்னிட்டு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சூறாவளி காற்று மற்றும் ஆழ்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், அடுத்த வாரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.