திங்கள், 23 மே, 2016

இந்துக்கள் எங்களுடைய சகோதரர்களே !


--------------------------------------------
முஸ்லிம்களாகிய நாங்கள் ஒரு போதும் இந்துக்களை எதிரியாக நினைக்கவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களை எதிரியாக நினைக்கவில்லை . அனைத்து மத மக்களும் கொள்கையில் வேறுபட்டாலும் சகோதர்களாக, நண்பர்களாக மனித நேயத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்தோம். வாழ்ந்தும் வருகிறோம்.
இந்துக்களும், முஸ்லிம்களும் அனைத்து உறவுகளிலும் இணைந்துள்ளோம். எத்தனையோ முஸ்லிம் மாணவர்களுக்கு இந்துக்கள் ஆசிரியர்களாக, இந்து மாணவர்களுக்கு முஸ்லிம்கள் ஆசிரியர்களாக கல்வி போதிக்கிறார்கள். இப்படி ஆசிரியர்கள்-மாணவர்கள், உரிமையாளர்கள்-வாடிக்கையாளர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள், தொழில் பங்குதாரர்கள், முதலாளிகள்-பணியாளர்கள், ஓட்டுனர்கள்- பயணிகள், மருத்துவர்கள்-நோயாளிகள், கடன் கொடுப்பார்-வாங்குபவர் என்று அனைத்து உறவிலும் இரு தரப்பிலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்கிறோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா.ஜ.க போன்ற வெறுப்பை விதைக்கும் வகுப்புவாத அமைப்புகள், இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்களை பற்றி வெறுப்பை உண்டாக்கி, அவர்கள் மனதில் முஸ்லிம்கள் என்றாலே எதிரிகள், தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், முஸ்லிம்களை கொல்வது தேச பக்தி என்ற விஷத்தை விதைக்கின்றனர்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களில் குறிப்பிட்ட மக்கள் மீதும் (மக்கள் அனைவரும் சமமே. யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறக்கூட மனம் வரவில்லை) கலவரங்களை , அதிகாரத்தை , அடக்குமுறையை ஏவி அழிக்கப் பார்கின்றனர்.
இந்த கயவர் கூட்டத்தை தான் நாங்கள் எதிக்கிறோம்.
ஏனென்றால் அவர்கள் எங்களை கொல்வது, எங்கள் வாழ்வாதரங்களை சூறையாடுவது, எங்கள் பெண்களை கற்பழிப்பதை எல்லாம் நியாயமாக, தேச பக்தியாக மக்கள் மனதில் போதிக்கின்றனர்.
எங்களுக்காக நடுநிலையோடு போராடி இவர்களை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களோ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, எங்கள் மீது தீவிரவாத பழியைப் போட்டு காவி பயங்கரவாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்கின்றன.
நாளிதழ்களில் இன்றைய உலகச் செய்திகள் என்பது உலக நாடுகளில் உள்ள கண்டுபிடிப்புகள், அறிவியல், சுற்றுசூழல் மற்றும் வாழ்வியல் மேம்பாடுகள் போன்ற பயனுள்ள செய்திகள் கிடையாது.
எங்கோ உலகின் எதோ ஒரு மூலையில் நடக்கும் உள்நாட்டு போர்கள் , தீவிரவாத செய்திகளை தினந்தோறும் உலகச் செய்திகளாக தொடர்ந்து வெளியிடுவதும், குற்றத்தில் முஸ்லிம் ஒருவர் சம்பந்தப்பட்டால் அந்த செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் கற்பனையோடு செய்தி வெளியிடுவதின் நோக்கம் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், குற்றவாளிகள் என்ற வெறுப்புணர்வை உண்டாக்குவதே.
உங்கள் பக்கத்து வீட்டு இந்து ஒருவர் ஒரு கொலையை செய்துவிட்டார் என்று வைத்துகொள்வோம். நீங்களும் இந்து என்ற காரணத்தால் உங்களையும், இந்து மதத்தையும் குற்றவாளியாக பாவித்தால் நியாயமா? இல்லை. அது போல உலகின் எதோ ஒரு மூலையிலும், ஏதோ ஒரு நாட்டிலும் நடைபெறும் குற்றங்களுக்கு எல்லாம் நாங்களும் நாங்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கமும் எப்படி பொறுப்பாவோம்?
சுய மரியாதையோடு, தைரியத்தோடு ஜனநாயக முறையில் இவர்களுடைய வெறுப்பை விதைக்கும் கொள்கையை இந்து மக்களிடம் எடுத்து சொல்லி இவர்களை தனிமைப்படுத்துவது எங்கள் கடமையல்லவா ?
நிச்சயமாக முஸ்லிம்கள் , நடுநிலையான இந்து சகோதரர்கள், இணைந்து வகுப்பு வாதம், ஊடக பயங்கரவாதம் , சமூக இன ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஒழிப்போம்.
வாழ்க சகோதரத்துவம்.