வியாழன், 26 மே, 2016

வக்பு

உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அர்ப்பணித்தல் என்ற பொருளாகும். இந்த சொத்துக்கள் இந்தியாவை ஆண்ட சுல்தான்களால் வக்பு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.
பள்ளிவாசல்களைப் பராமரித்திட, முஸ்லிம்களின் அடக்க ஸ்தலங்களை உருவாக்கிட, ஈத்கா மைதானம் உருவாக்கிட மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் மதரசாக்கள் ஆரம்பித்திட சுல்தான்கள், முகலாய மன்னர்கள், ராஜபுத்திர மன்னர்கள், திப்புசுல்தான், சேதுபதி மன்னர்கள், பாளையக்காரர்கள், பல செல்வந்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி குளம், கண்மாய், நஞ்சை என கொடையாக கொடுத்தனர். இந்த சொத்துக்களை முறையாகப் பராமரித்திட முத்தவல்லிகள் என்ற மேற்பார்வையாளர்கள் டெல்லியை ஆண்ட சுல்தான்களால் நியமிக்கப்பட்டனர். முத்தவல்லி என்பது மேலாளர் என்று பொருள்படும்.
பண்டைய காலத்தில் முத்தவல்லிகள் ஊழலில் ஈடுபட்டு தண்டனையும் பெற்றிருக்கிறார்கள். சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆண்ட 12ம் நூற்றாண்டில் பல முத்தவல்லிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகலாய மன்னர் அக்பர் ஆண்ட 16ம் நூற்றாண்டில் சேக் உசேன் என்ற முத்தவல்லி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1857 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு வக்பு சொத்துக்களுக்கு கடுமையான வரிவிதிப்பு விதிக்கப்பட்டது.
இதனால் பல செல்வந்தர்கள் தங்களது சொத்துக்களைப் பாதுகாக்க ஆங்கில அரசு ஒப்புதலுடன் வக்பு-அல்-அவுலாத் என்ற வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட பெயருக்கு வக்பு செய்தார்கள். அதன் பின்னர் 1906 ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கத்திற்குப் பிறகு வக்பு சொத்துக்களைக் காப்பாற்ற முஸ்லிம்கள் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் என நாடு பிரிக்கப்பட்டபோது 800 ஆண்டு கால பராம்பரிய வக்பு சொத்துக்கள் சூறையாடப்பட்டன‌. அதன் பின்னர் 1954 ஆம் ஆண்டு மத்திய வக்பு வாரியம் தொடங்கப்பட்டது. ஆனாலும் வக்பு சொத்துக்களை பாதுகாக்கமுடியவில்லை.
மத்திய அரசு, டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, தொல்பொருள் ஆய்வு நிறுவனம், அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசு நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தன‌. இதனை கருத்தில் கொண்டு டெல்லி வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வி.சி.ராஜ்பிராச்சார அவர்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பல சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் டெல்லி கோல்ப் கிளப், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம், ஓபராய் நட்சத்திர ஹோட்டல் ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக தெரிவித்தார். இதே போல மும்பையில் சாதாரண மக்கள் நெருங்கமுடியாத இடமாக உள்ள ஆல்டா மவுண்ட் பகுதியில் 4,532 சதுரஅடி நிலத்தை ரூபாய் 16 இலட்சத்திற்கு முகேஷ் அம்பானிக்கு மகாராஷ்டிரா வக்பு வாரியம் விற்பனை செய்துள்ளது.
அதே போல பரீதாபாத்தில் 5 ஏக்கர் நிலத்தை மாதம் வெறும் 500 ரூபாய்க்கு பல ஆண்டுகளுக்கு லீசுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து அதில் தொழிற்சாலையும் உருவாக்கியுள்ளார்கள்.
பெங்களுரில் வின்ட்சர் மானர் என்ற நட்சத்திர விடுதிக்கு 500 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மாதம் மிகவும் குறைந்த 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளனர். இந்தியாவில் ரயில்வே துறை, இராணுவத்துறைக்கு அடுத்தபடியாக சொத்துக்கள் இருப்பது வக்பு வாரியத்திற்கு மட்டுமே. எனவே வக்புவாரியத்தை சரிசெய்து பொதுமக்களின் நலனுக்காகப் போராட வக்புவாரியத் தலைவர்கள் முன்வரவேண்டும்.
நன்றி:- வைகை அனிஷ்
ஆதார நூல்கள்:
1.வக்புவாரிய கொள்ளை, போர்முரசு மாதமிருமுறை இதழ்,ஸ்டீபன்ராஜ், சென்னை.
2.வக்பு சொத்துக்கள்-சுதந்திர இந்தியாவின் மகிப்பெரிய ஊழல் ஆக்கிரமிப்பு கொள்ளை, சலீம், சமூகநீதிஅறக்கட்டளை பதிப்பகம், சென்னை