வெள்ளி, 20 மே, 2016

விரைவில் சந்தைக்கு வருகிறது உடனுக்குடன் மொழியாக்கம் செய்யும் கருவி

மொழியின் தேவையென்பதே இருவருக்கிடையில் தெளிவான தொடர்பை ஏற்படுத்துவது தான். பல்லாயிரம் மொழிகளை பேசும் மக்கள் கூட்டம் வாழும் உலகில் மொழியின் பயன்பாடு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது மறுக்க முடியாததே. இந்த நிலையில், பல மொழிகளை பேசும் மக்களிடையே ஒரே புரிதலை விரைவாக சாத்தியப்படுத்தும் முயற்சிக்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அவைகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது.

நாடாளுமன்றம் போன்ற இடங்களில் மொழியாக்க கருவிகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் மத்தியில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து சந்தையை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. இந்த போட்டியில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளது நியூயார்க்கை சேர்ந்த Waverly Labs நிறுவனம். 
விரைவில் சந்தைக்கு வருகிறது உடனுக்குடன் மொழியாக்கம் செய்யும் கருவி
காதுக்குள் அடங்கக் கூடிய வகையில் மிக சிறியதாகவும், அழகாகவும் மொழியாக்கம் செய்யும் கருவியை வடிவமைத்துள்ளது Waverly Labs நிறுவனம். ஸ்மார்ட் போன் மூலம் இயங்கும் வகையில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மொழியாக்க கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இயக்க இண்டர்நெட் இணைப்பு தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொழியில் மட்டுமே மொழியாக்கம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கருவி, விரைவில் மேம்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் பல மொழிகளில் பேசினாலும் ஒரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் வகையில் உருவாக்க Waverly Labs நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச், இத்தாலியன் மொழிகளுக்குள் மொழியாக்கம் செய்யும் வகையில் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தி, அராபிக், கிழக்காசிய மொழிகள் மற்றும் ஸ்லாவிக் மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யும் வகையில் கருவி மேம்படுத்தப்பட உள்ளது. 

புதிய மொழியாக்க கருவியின் விலை 249 அமெரிக்க டாலர்கள் முதல் 299 அமெரிக்க டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அறிமுக சலுகை விலையாக 129 டாலர்களுக்கு விரைவில் சந்தையில் விற்கப்பட உள்ளது.