வியாழன், 26 மே, 2016

காது வலியை குணபடுத்தும் நாய்வேளை-ஒரு சிறந்த வலி நிவாரணி-எப்படி..?


உடல் வலியை போக்க கூடியதும், காது வலிக்கு மருந்தாக அமைவதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டதும், புண்களை விரைவில் ஆற்றக் கூடியதுமான நாய்வேளையின் பயன்கள் அதிகம். நாய்வேளை மஞ்சள் நிற பூக்களை பெற்றது. சிறிய இலைகளை கொண்டது. இது, நல்வேளை செடியை பொன்று காணப்படும். இதன் காய்கள் பீன்ஸ் போன்று இருக்கும். காயை உரித்தால் அதனுள் கடுகு போன்ற விதை இருக்கும்.
நாய் கடுகு என்று அழைக்கப்படும் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நாய்வேளை காய்கள் அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், எரிச்சலை கொடுத்து வலியை போக்க கூடியது. உடல் வலியை குணப்படுத்தும்.
காது நோய், தோல் நோய்க்கு மருந்தாகிறது. நாய்வேளையின் இலைகளை பயன்படுத்தி வாதம், வலி, பித்தம், குடைச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கு ஒரு பிடி இலை எடுத்து, கால் ஸ்பூன் அளவுக்கு
நெய் விட்டு வதக்கவும். அதனுடன், அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் இரையறை கோளாறு, சோகை, வலி குணமாகும். நாய்வேளை இலைகள் உணவாகிறது.
இதில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. ரத்தத்துக்கு ஊட்டம் அளிக்கும் தன்மை கொண்டது. தலைவலி, இடுப்பு வலி, உடல் வலி, மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றுக்கு மருந்தாகிறது.
நாய்வேளை இலைகளை பயன்படுத்தி காதுகளில் சீல் வடிதல், காது வலிக்கான மருந்து தயாரிக்கலாம். இலைகளை வெந்நீர் விட்டு கசக்கினால் சாறு கிடைக்கும். நல்லெண்ணையுடன் இலைசாறு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.
வடிகட்டி ஆற வைத்தபின், வலி இருக்கும்போது 2 சொட்டு விட்டால் காது வலி குறையும். காதில் சீல் வடிதலை கட்டுப்படுத்தும். நாய்வேளை வேரை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு துண்டு வேரை இடித்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 10 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி வடிகட்டி குடிக்கும்போது, கழிச்சலை ஏற்படுத்தி புழுக்களை வெளியேற்றும்.
கீரி பூச்சி, நாக்கு பூச்சிகள், நாடா பூச்சிகளை வெளித்தள்ளும். நாய்வேளை செடியின் பூக்கள், விதைகள், வேர்கள் என அனைத்தும் பயன்படும். இது எளிதாக கிடைக்க கூடியது. தலை நோய், உடல் நோய், மார்பு வலிக்கு மருந்தாகிறது.
இலைகளை மேல்பூச்சு மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும். வடுக்கல் இல்லாமல், சீல் பிடிக்காமல் புண்கள் ஆறும். அனைத்து வகையான புண்களை ஆற்றும் தன்மை கொண்ட நாய்வேளை செடி நோய் நீக்கியாக பயன்படுகிறது.