வியாழன், 26 மே, 2016

முஸ்லிம்களின் நிலையும் ஊடகங்களின் நயவஞ்சகமும்.




அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?
பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.
சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.
இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.
இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் (மீடியா) என்ன செய்ய வேண்டும்?
யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?
ஆனால் அந்த நபர் வருகிறார் ஏண்டா இப்படி திருடுற சார் இவனை அடியுங்க சார் என்கிறார். இதுதான் ஊடகமற்ற ஊமைகளான நமது சமுகத்தின் இன்றைய நிலை.