செவ்வாய், 24 மே, 2016

அமெரிக்காவுக்கு வந்த பறக்கும் தட்டுகள்?

பறக்கும் தட்டுகள், வேற்றுலவாசிகள் போன்றவற்றை சாதாரண மக்கள் மட்டுமின்றி, மிகச்சிறந்த விஞ்ஞானிகளேகூட நம்புகிறார்கள். இ‌ந்த நம்பிக்கைதான், வேற்றுலவாசிகள் தொடர்பான செய்திகள் பெருகியிருப்பதற்குக் காரணம்.
ஏரியா 51: இன்றும் விடுபடாத புதிர்1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி. வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டன. அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. வேற்றுலவாசிகள் சிலரைப் பிடித்து வைத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன. அமெரிக்க அதிகாரிகள் இந்தத் தகவலை மறைக்க முயற்சி செய்வதாகவும் சில ஊடகங்கள் குற்றம்சாட்டின. நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள Roswell பகுதியில் நடந்ததாக நம்பப்பட்ட இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
வேற்றுலகில் இருந்து வந்த பறக்கும் தட்டைப் பார்த்ததாக பொதுமக்கள் பலர் கூறினார்கள். வெறும் செய்திகளாக மட்டுமல்லாமல், ஆவணப் படங்களாகவும், புலனாய்வுக் கட்டுரைகளும் இந்தச் செய்தி உலகமெங்கும் பரவியது. அமெரிக்க அதிகாரிகள் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்தார்கள். பறந்து வந்து தரையில் விழுந்தது பறக்கும் தட்டல்ல, அது வானிலையைக் கண்காணிப்பதற்கான பலூன் என்று அவர்கள் விளக்கமளித்தார்கள். இந்த விளக்கத்தை மூத்த விஞ்ஞானிகளே கூட ஏற்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பறக்கும் தட்டுகள் ராஸ்வெல்லில் தரையிறங்கியது உண்மைதான் என்று கூறும் பல புத்தகங்கள் வெளியாகின. 1997-ஆம் ஆண்டு சிஎன்என் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், பறக்கும் தட்டுகள் வந்ததை நம்புவதாக பெரும்பான்மையான மக்கள் கூறியிருந்தார்கள். ராஸ்வெல்லில் இறங்கிய பறக்கும் தட்டை அதிகாரிகள் மறைத்து வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினார்கள். இப்படி நாளாக நாளாக பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அதிகரித்தனவே தவிர, சற்றும் குறையவில்லை.
நியூ மெக்சிகோவில் உள்ள ராஸ்வெல்லில் இருந்து நெவேடா மாநிலத்தில் உள்ள ஏரியா 51 பகுதி ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. ராஸ்வெல்லில் கைப்பற்றப்பட்ட பறக்கும் தட்டுகளும், வேற்றுலகவாசிகளும் ஏரியா 51 ரகசியப் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள். இந்தக் கருத்துகளுக்கு வலுச் சேர்த்தவர், Bob lazer. 1989-ஆம் ஆண்டு இவர் அளித்த பேட்டி பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுலகவாசிகள் தொடர்பான கதைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஏரியா 51-ல் பூமிக்கு அடியில் இயங்கும் செக்டார் -4 என்ற ரகசிய ஆய்வகத்தில் தாம் வேலை செய்ததாக லேசர் கூறினார். வேற்றுலகவாசிகள் வந்த பறக்கும் வாகனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது தொடர்பான பணிகளில் தாம் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏரியா 51 பற்றிய மிக முக்கியமான ஆவணமாக பாப் லேசரின் பேட்டி பார்க்கப்படுகிறது.
22
இவர் தவிர BRUCE BURGESS என்ற மற்றொருவரும் வேற்றுலவாசிகள் தொடர்பாக ஆராய்ச்சியில் தாம் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். வேற்றுலகவாசிகளுடன் பேசுவதற்கும், வேறுகிரகங்களுக்குச் செல்வதற்கான விண்கலத்தை வடிவமைப்பதற்குமான பணிகள் ஏரியா 51 பகுதியில் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். DAN BRISCH என்பவர் ஏரியா 51-ல் வேறொரு வேற்றுல வைரஸ்களை குளோனிங் முறையில் பிரதியெடுக்கும் பணிகளை அமெரிக்கர்கள் மேற்கொள்வதாகக் கூறி புதிய சர்ச்சையை உருவாக்கினார்.
ஆனால் ஏரியா 51 என்பது வெறும் விமானப்படைத் தளம்தான் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியெனில் ஏரியா 51 பகுதிக்கு மேலே பறந்து சென்ற மிகவும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்ட பொருள்கள் எவை? அவை வேற்றுலகத்தில் இருந்து வந்தவையா, இல்லை உள்ளூரில் வடிவமைக்கப்பட்டவையா? இன்றுவரைக்கும் ஏரியா 51 தொடர்பான உண்மைகளை அமெரிக்கா வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? புதிர்கள் நிறைந்த மற்றொரு கோணத்தை நாளை பார்க்கலாம்