நாட்டின் உள்ள அனைவரின் செல்போன் நம்பருடன், ஆதார் எண்ணை அடுத்த ஓர் ஆண்டுக்குள் இணைக்க வேண்டும், போலிகளை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘லோக்நிதி’ எனும் தன்னார்வ நல அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்து இருந்தது. அதில், ‘ நாட்டில் செல்போன் பயன்படுத்துவர்கள் அனைவரின் நம்பரையும், அவர்களின் ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும்.
போலிகளை கட்டுப்படுத்தவும், செல்போன் எண் வைத்துள்ளவர்கள், அளித்துள்ள முகவரி சான்றிதழும் சரியாக இருக்கிறதா? என சரிபார்க்க உத்தரவிட வேண்டும். இதன் மூலம் போலியாக முகவரி கொடுத்து, செல்போன் எண் வாங்குபவர்கள் தடுக்கப்படுவார்கள். சட்டவிரோத செயல்களுக்கு செல்போன் எண் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்’ என்று மனு அளித்து இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர் மற்றும் நீதிபதி என்.வி ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு முந் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்ரி வாதிடுகையில், “ போலியான அடையாள எண் கொடுத்து செல்போன் எண் வைத்து இருப்பதை தடுக்கும் வகையில், ஆதார் எண்ணுடன், அனைவரின் செல்போன் எண்ணும் அடுத்த ஓர் ஆண்டுக்குள் இணைக்கப்படும். அதற்கான திறன் வாய்ந்த செயல்முறையை அரசு கையாளும்.
நாட்டில் செல்போன் பயன்படுத்துவர்களில் 90 சதவீதம் ப்ரீபெய்டு எண்களையே பயன்படுத்துகிறார்கள். ஆதலால், இனி வரும் புதியவாடிக்கையாளர்களிடம் முகவரியை சரிபார்க்க ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட இ.கே.ஒய்.சி. முறையை பயன்படுத்துவோம். அதாவது புதிதாக செல்போன் எண் வாங்குபவர்கள், தங்களின் அடையாள அட்டையை காண்பித்து அதை சரிபார்த்தபின், அந்த எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முறை செயல்படுத்தப்படும்” என்றார்.
இந்த வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர், தலைமையிலான அமர்வு, “ அடுத்த ஓர் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரின் செல்போன் எண்களும், அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.