தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டும் கொரானா தாக்கம் இருந்து வருவதால், பள்ளிகள் அதிக நாட்கள் செயல்படாத நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செயது தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10000ஐ கடந்து வருகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். சிபிஎஸ்இ மற்றும் ஜேஇஇ தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி அல்லது பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/12th-exams-postponed-tn-govts-announced-293252/