வியாழன், 22 ஏப்ரல், 2021

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை? மூடப்பட்ட மையங்கள்; திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

 கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசிகள் பற்றாக்குறை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் புதன்கிழமை அன்று 55,830 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் சில தடுப்பூசி மையங்களுக்கு வருகை புரிந்த மக்களை, தடுப்பூசி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தில் 2 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த வாரம் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை கூட 2 லட்சத்தை நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில அரசு சுகாதார மையங்களில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பு மருந்துகளும் இல்லை என்று கூறியுள்ளனர். சில இடங்களில் கோவாக்ஸின் இல்லை என்று கூறியுள்ளனர். இரண்டாம் டோஸ்களை பெற வரும் மக்களை இரண்டு நாட்கள் கழித்து வர சொல்லுகின்றனர் மருத்துவ ஊழியர்கள். ஆனால் இரண்டு நாட்களில் மீண்டும் தடுப்பூசிகள் வந்துவிடுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் புதன்கிழமை அன்று செயல்படவில்லை. ஆனால் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் ஆறு லட்சம் டோஸ்களை மாவட்டங்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கையிருப்பாக 6 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்ட் உள்ளது. மேலும் 5 லட்சம் கோவாக்ஸின் டோஸ்களை கேட்டிருக்கின்றோம். தடுப்பூசிகள் பற்றாக்குறை என்பது பொய் என்று கூறினார்.

கோவையில் இது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போது மொத்தமாக கோவையில் 21000 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. ஆனால் புதன்கிழமை அன்று 3,051 நபர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால் குறைந்த அளவிலேயே மக்கள் தடுப்பூசிகளை பெற வருகின்றனர் என்று கூறப்பட்டது. கடந்த 87 நாட்களில் 49.23 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid19-vaccine-in-tamil-nadu-centers-shut-but-officials-say-no-vaccine-shortage-294547/