தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இ.வி.எம். இயந்திங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக திமுகவினர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் வாக்குகள் பதிவான இ.வி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் அனுமதியின்றி ஜீப் ஒன்று உள்ளே சென்று வந்ததாகவும் இ.வி.எம் அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள் இருப்பதாகவும் போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு, அதிமுகவில் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, டிடிவி தினகரன் ஆதரவளாராக செயல்பட்டதையடுத்து தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. பின்னர், டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அமமுகவில் இருந்து விலகி, 2019ல் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் தேனி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்கினார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில், தங்க தமிழ்ச்செல்வன் போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தங்க தமிழ்ச்செல்வன் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நேரடியாக மோதுகிறார். போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து இ.வி.எம் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இ.வி.எம் வைக்கப்பட்டுள்ள சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக கண்டெய்னர் வண்டிகள் வருவதாகவும் சில நேரங்களில் திடீரென சிசிடிவி கேமிரா செயலிழப்பதாகவும் அனுமதி இல்லாத நபர்கள் உள்ளே நுழைவதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள, போடிநாயக்கனூர், கம்பம், பெரிய குளம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் இயந்திங்கள், தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்பவர் தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கே போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிசிடிவி வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன.
இப்படியான சூழ்நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளரும் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன், பெரிய குளம் தொகுதி வேட்பாளரும் அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினர் நேற்று (ஏப்ரல் 21) இ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு சென்று, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதி இல்லாமல் ஒரு ஜீப் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், சிசிடிவி வீடியோ பதிவு காட்சிகளை பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வௌம் வாகனங்களின் எண்களை பதிவு செய்து அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே அனுப்ப வேண்டும். ஆனால், பதிவு செய்யாம வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனை, காவல்துறை அதிகாரி முத்துராஜ் மற்றும் சையத் பாபுவிடம் முறையிட்டனர். இதையடுத்து, சிசிடிவி வீடியோ பதிவு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஏப்ரல் 13ம் தேதி ரண்டு போலீஸ் ஜீப்புகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அங்கு வந்தது தெரியவந்தது. பின்னர், அந்த போலீஸ் ஜீப் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்று திமுக வேட்பாளர்கள் பார்வையிட்டனர். அப்போது, இ.வி.எம் இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு அருகில் 96 தகரப்பெட்டிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகரப் பெட்டிகள் ஏன் இங்கே வந்தது என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்குப்பதிவு இயந்திங்களை எடுத்துச் செல்வதற்காக அந்த பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், தேர்தல் விதிமுறைப்படி அப்படி ஸ்ட்ராங் ரூமுக்கு அருகில் வைக்கக்கூடாது என்று தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார். இதனால், அங்கே பரபரப்பு நிலவியது. தேர்தல் நடத்து அலுவலர், அந்த பெட்டிகளைத் தனியாக ஒரு அறையில் வைத்து, அவற்றை 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் சமாதானம் அடைந்தார்.
கொடுவிலார் பட்டியில் தனியார் கல்லூரியில் இ.வி.எம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் என்ன நடந்தது அங்கே என்ன மாதிரியான பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் ஐஇ தமிழ் தொடர்பு கொண்டு பேசினோம். தங்க தமிழ்ச்செல்வன் நம்மிடம் கூறியதாவது: “இ.வி.எம் வைக்கபட்ட 96 டிரங்கு பெட்டிகள் ஸ்ட்ராங் ரூம் பக்கத்தில் வைத்திருந்தார்கள். அப்படி அந்த இடத்தில் வைத்தது தப்பு. நான் அங்கே போய் அதை சுட்டிக்காட்டி பெரிய கெள்வியாகும் என்று சொன்னதால அங்கே 2 சிசிடிவி கேமிரா, லைட் போட்டு, அந்த இடம் திரையில் தெரிகிற மாதிரி வைத்துள்ளார்கள்.” என்று கூறினார்.
அங்கே என்ன மாதிரியான பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், “பாதுகாப்பு குறைபாடு என்றால், அந்த இடம் கல்லூரி என்பதால் நிறைய பிள்ளைகள் அட்மிஷனுக்காக வருகிறார்கள். அவர்களை எந்த அடையாள அட்டையும் இல்லாமல் அனுப்புகிறார்கள். உதாரணத்துக்கு நானே நாளைக்கு 100 பிள்ளைகள அனுப்பலாம் என்று அங்கே உள்ள குறைபாட்டை சொன்னேன். அதற்கு அதிகாரிகள், அங்கே போலீஸ் பாதுகாப்பு போட்டு அவர்களை சோதனை செய்து அனுப்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.
அதே போல, 2 வாகனங்கள் போலீசுக்கு உணவு எடுத்துச் செல்ல வந்திருக்கிறது. அந்த வாகனங்களை பதிவு செய்யாமல் அனுப்பியிருந்தார்கள். அதை, நாங்கள்தான் கண்டுபிடித்து கூறினோம். அதற்கு சரி பதிவு செய்து அனுப்புகிறோம் என்று கூறினார்கள். இது போன்ற குறைபாடுகளை சொல்லும்போது அதை சரி செய்கிறார்களே தவிர நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள்.” என்று கூறினார்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், “அந்த ஸ்ட்ராங் ரூமுக்குள்ள சென்று இ.வி.எம்-களை தொட்டு ஏதாவது செய்தால்தான் ஏதேனும் முறைகேடு செய்ய முடியும். மற்றபடி எந்த தப்பும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு அங்கே யாரும் போக முடியாது. பார்ப்போம்” என்று கூறினார்.
அங்கே தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேள்விகு “நாங்கள் 24 மணி நேரமும் அங்கே ஆள் போட்டு கண்காணித்து வருகிறோம்.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/election/bodinayakanur-dmk-candidate-thanga-tamilselvan-rises-lack-of-security-issues-in-vote-counting-centre-294893/