தமிழகத்தில் நேற்று 14,842 பேருக்கு கொரோ வைரஸ் தொற்று என்று பதிவாகியிருந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய பல மாவட்டங்களில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) ஒரே நாளில் புதியதாக 15,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இன்று 82 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரத்து 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 11 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து மருத்துவமனையில் வீடு திரும்பினர். இதனால், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரத்து 251 பேர் ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று நிலவரம்
சென்னையில் மட்டும் இன்று (ஏப்ரல் 25) ஒரே நாளில் புதிதாக 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக, இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,242 பேருக்கும் கோவையில் 1,028 பேருக்கும் திருவள்ளூர் மாட்டத்தில் 885 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 603 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 558 பேருக்கும், திருநெல்வேலியில் 549 பேருக்கும் தூத்துக்குடியில் 432 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-state-today-coronavirus-update-daily-positive-cases-crossed-fifteen-thousand-295811/