வியாழன், 22 ஏப்ரல், 2021

சமூக இடைவெளி : வாக்கு எண்ணிக்கை தாமதமாக வாய்ப்பு

 தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் குறைக்க ஆலோசனை நடைபெற்று வருவதால் தேர்தல் முடிவு அறிவிக்க தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் புதுச்சேரி கேரளா அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் , அரசியல் கட்சிகள் அந்த நாளுக்காக காத்திருக்கின்றனர். இதனால்  இந்த தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுதப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கவசம், சமூக இடைவெளியி அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு  மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன்  காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால், தேர்தல் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைள் காரணமாக வாக்கு எண்ணும் மேஜைகளைக் குறைக்க ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரை ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் இருந்து வந்த நிலையில், தற்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், 4 முதல் 7 மேசைகள் வரை குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நடவடிக்கையின் காரணமாக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 7 முதல் 10 எண்ணிக்கையிலான மேசைகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது

இதில் எத்தனை மேசைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது வாக்கு எண்ணும் மையத்தின் பரப்பளவை பொருத்து மாறுபடும் என்றும், இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணப்படும் மையங்களில் மேஜைகள் குறைக்கப்படுவதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் என்றும், மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாக தாமதம் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில்,  மேஜைகள் குறைக்கப்படுவது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு நாளை மீண்டும் ஆலோசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-result-delayed-election-results-294333/