திங்கள், 26 ஏப்ரல், 2021

தடுப்பூசி பற்றாக்குறை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவரம் என்ன?

  மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற மே 1-ம் தேதி முதல் செலுத்தப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் தங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் மே 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள இயக்கத்தை தொடங்க முடியாது என அறிவித்துள்ளன.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல் செய்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சீரம் நிறுவனத்திடம் ராஜஸ்தான் அரசு தடுப்பூசிகளை கோரியுள்ளது. இந்நிலையில், மே 15-ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசியை ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்க முடியாது என்று கோவிஷீல்ட்டை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கூறியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ள்து.

தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சீரம் நிறுவனத்துடன் பேசும்படி, மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தை தொடர்புக் கொண்ட ராஜஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் கணிசமான எண்ணிக்கையில் உடனடியாக தடுப்பூசிகளைப் பெற ஆர்டர் செய்துள்ளது. மத்திய அரசின் ஆர்டர்களை அனுப்புவதற்கு மே 15 வரையிலான கால அவகாசம் தேவைப்படுவதால், அதன் பின்னரே மற்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்க விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும், ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 3.13 கோடி பேர் உள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மத்திய அரசின் அனைவருக்கும் தடுப்பூசி கொள்கையை ராஜஸ்தான் அரசு எவ்வாறு செயல்படுத்தும்,’ என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை வழங்க அறிவுறுத்த வேண்டமென, அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசிக்கான பணத்தை செலுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கும் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி எஸ் சிங் தியோ மற்றும் பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து ஆகியோர் ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஷர்மாவை அடுத்து, மத்திய அரசுக்கு எதிரான குரல்களை எழுப்பி உள்ளனர்.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற உத்தரவுகளை வழங்க அசாம் முயற்சி செய்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகே தடுப்பூசிகளைப் பெற சாத்தியம் இருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. நான்கு மாநில சுகாதார அமைச்சர்களும் மே 1 முதல் அடுத்த கட்ட தடுப்பூசிகளுக்கு மாநிலங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் நாங்கள் கேட்கும் டோஸ்களின் அளவை வழங்க இயலாத சூழலை சுட்டிக் காட்டி உள்ளனர்.

மாநில அரசுகளுக்கு போதிய அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இயலாது என்ற நிலைமை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. தடுப்பூசி இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வகையில் உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மாநில அரசுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது. ஒரு வகையில், மாநிலங்களின் மீது சுமையை சுமத்தி, அவற்றை இழிவுபடுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர், சித்து தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி கோரிக்கைகளுக்கு எங்கள் அனைவருக்கும் ஒரே பதில் அளிக்கப்பட்டு வருகிறது. மே 15 வரை முன்பதிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் நாங்கள் தடுப்பூசியை போட விரும்புகிறோம். ஆனால், அவற்றைஉ நாங்கள் எங்கள் வீடுகளிலா தயாரிக்க முடியும் என, அம்மாநில சுகதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 18 ,முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட 30 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்களை வழங்குமாறு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய சுகாதாரத் துறையை கேட்டுக் கொண்டதாக, பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ரெமெடிசிவர் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக நான்கு மாநில் அரசுகளும் குற்றம் சாட்டி உள்ளன.

சுமார் 30 சதவீத கிராமங்களுக்கு தொற்று பரவியுள்ள ராஜஸ்தானில் நிலைமை மோசமாகி வருவதாக சர்மா கூறினார். மீட்பு விகிதம் 98.60 சதவீதத்திலிருந்து 73.60 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், இருப்பினும், இறப்பு விகிதம் 0.70 சதவீதமாக குறைவாகவே உள்ளது.

ராஜஸ்தானில் 8 லட்சம் தடுப்பூசி டோஸ்களே இருப்பதாக சுகாதார அமைச்சர் சர்மா கூறியுள்ளார். பஞ்சாபில் 4 லட்சம் டோஸ் இருப்பதாக சித்து கூறியுள்ளார். மேலும், ஜார்கண்ட் அமைச்சர் குப்தா, பங்களாதேஷில் இருந்து ரெமெடிவிர் வாங்க மாநில அரசு விரும்பியதாகவும் ஆனால், மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் என பஞ்சாப் சுகாதார அமைச்சர் சித்து கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியலமைப்பு, ஒரு வரி பற்றி பேசும் பாஜக அரசாங்கம் இப்போது தடுப்பூசிகளின் மாறுபட்ட விலை நிர்ணயம் மூலம் தொற்றுநோயிலிருந்து நன்மைகளைப் பெற முயற்சிக்கிறதா என கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

நரேந்திர மோடி அரசாங்கம், உலகில் மிகவும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியதாக காங்கிரஸ் மத்திய தலைமை ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும் தடுப்பூசி போடுவதில் வெட்கக்கேடான லாபத்தை அடைய மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/four-opposition-states-say-no-stocks-cant-begin-corona-vaccination-for-all-on-may-1/